பும்ரா குழந்தைக்காக ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஷாஹீன் அப்ரிடி – ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய 2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

குறிப்பாக கடந்த போட்டியில் சவாலை கொடுத்த சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர்களில் கேப்டன் ரோஹித் சர்மா 56 (49) ரன்களும் சுப்மன் கில் 58 (52) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 24.1 ஓவரில் 147/2 ரன்கள் எடுத்து இந்தியா நல்ல துவக்கத்தை பெற்ற போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. குறிப்பாக ஏற்கனவே தொடரின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போட்டியும் பாதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அன்பு பரிசு:
இருப்பினும் இந்த முக்கியமான போட்டி மழையால் தடைப்படக்கூடாது என்பதற்காக ஆசிய கவுன்சில் ஸ்பெஷலாக நாளை ரிசர்வ் நாள் அறிவித்துள்ளது. ஆனால் செப்டம்பர் 11ஆம் தேதியும் கொழும்பு நகரில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பதில் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கடந்த அயர்லாந்து டி20 தொடரில் கம்பேக் கொடுத்து இந்த ஆசிய கோப்பையிலும் விளையாடி வருகிறார்.

அந்த நிலையில் தமது குழந்தை பிறப்பதற்காக நாடு திரும்பி அவர் நேபாளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் தமக்கு சிங்கக்குட்டி போன்ற ஆண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து மீண்டும் இலங்கை திரும்பிய அவர் இந்த போட்டியில் ஷமிக்கு பதிலாக இடம் பிடித்து விளையாடினார். ஆனால் மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் போட்டியின் முடிவில் அவரை சந்தித்த பாகிஸ்தான் நட்சத்திர வீரர் சாகின் அப்ரிடி தந்தையானதிற்காக சிறப்பு பரிசு வழங்கினார்.

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் சார்பில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஷாஹீன் அப்ரிடி கூறினார். மேலும் உங்கள் குழந்தை அடுத்த பும்ராவாக வர வேண்டுமென அவர் வாழ்த்தியதற்கு சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட பும்ரா பரிசையும் வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்தார். அப்படி பாகிஸ்தானை சேர்ந்த முதன்மை வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவைச் சேர்ந்த முதன்மை வேகபந்து வீச்சாளருக்கு இப்படி ஒரு அன்பான பரிசை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதைப் பார்த்த இந்திய ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்து ஷாஹீன் அப்ரிடிக்கு நன்றியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் என்னதான் பகைமை, எல்லை பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து களத்திற்கு வெளியே நட்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு நல்ல மனது வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement