சிரிக்கிறீங்களா சிரிங்க, மேட்ச்ல யார் ஜெயிப்பான்னு பாப்போம் – அஜித் அகர்கருக்கு சடாப் கான் எச்சரிக்கை, காரணம் என்ன

Sadhab Khan
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நீண்ட இடைவெளிக்கு பின் விரைவில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையிலும் ஐசிசி உலகக் கோப்பைகளிலும் மோத உள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. அந்தத் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இவ்விரு அணிகளும் சூப்பர் 4 சுற்றிலும் ஃபைனலிலும் மீண்டும் மோதுவதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

அதை விட அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் மோத உள்ளது உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் அந்தப் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த நிலைமையில் சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அவர்கள் ஆசிய கோப்பை அணியை வெளியிட்டார்.

- Advertisement -

அப்போது பாகிஸ்தான் அணியில் உள்ள மிரட்டலான ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “அவர்களை விராட் கோலி பார்த்துக் கொள்வார்” என்று சிரித்துக் கொண்டே அஜித் அகர்கர் பதிலளித்தார். அதாவது ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் துரத்தும் போது 4 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே இந்தியா திண்டாடியது.

அப்போது பாண்டியாவுடன் இணைந்து மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 18வது ஓவரில் ஷாஹின் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரிகளை அடித்து வெற்றிக்கு போராடினார். அதை விட உலகின் பாகிஸ்தானின் அதிவேக பவுலராக பார்க்கப்படும் ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பின்னங்களில் நின்ற வாக்கில் நேராக உலகமே வியக்கும் அளவுக்கு அபாரமான சிக்சர் அடித்த விராட் கோலி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து மொத்தமாக 82* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு காலத்திற்கும் மறக்க முடியாத மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் பவுலர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் இம்முறை நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அஜித் அகர்கர் கலகலப்பாக அப்படி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீங்கள் என்ன தான் சிரித்தாலும் போட்டி நாளன்று யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பார்ப்போம் என அஜித் அகர்கருக்கு நட்சத்திர பாகிஸ்தான் வீரர் சடாப் கான் மறைமுகமான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஆப்கானிஸ்தான் தொடருக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:ஷாஹீன் அப்ரிடியை ஆசிய கோப்பையில் சமாளிக்க ரோஹித் எடுத்துள்ள புதிய பயிற்சி – விவரம் இதோ

“அவை அனைத்தும் போட்டி நடைபெறும் குறிப்பிட்ட நாளன்று என்ன நடக்கிறது என்பதை பொறுத்ததாகும். இப்போது இந்தியா அல்லது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். ஏனெனில் யார் என்ன சொன்னாலும் அது எங்களுடைய செயல்பாடுகளை பாதிக்கப் போவதில்லை. எனவே போட்டி நடைபெறும் போது என்ன நடக்கிறது என்பதை நாங்களும் பார்க்க தானே போகிறோம்” என்று கூறினார்.

Advertisement