அந்த தங்கமான பவுலரை கோட்டை விட்டதற்காக அனுபவிங்க – பெங்களூருவை விளாசும் சேவாக்

sehwag
- Advertisement -

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியுள்ள ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இந்த தொடரின் 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய 2-வது போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. மறுபுறம் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸ் தலைமையில் முதல் முறையாக களமிறங்கிய பெங்களூரு முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வியடைந்தது.

Virat Faf Du Plessis

- Advertisement -

பெங்களூரு பவுலிங் மோசம்:
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 205/2 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த டு பிளசிஸ் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் உட்பட 88 ரன்கள் விளாசினார். அவருடன் கடைசி வரை நின்று பஞ்சாப் பந்து வீச்சை பந்தாடிய விராட் கோலி 41* (29) ரன்களும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32* (14) ரன்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 206 என்ற மிக்பெரிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சாளர்கள் படுமோசமாக பந்து வீசினார்கள் என்றே கூறவேண்டும்.

ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 32 (24), ஷிகர் தவான் 43 (29) என குறைந்த பந்துகளில் அதிரடியாக ரன்களை அடிக்க அடுத்து களமிறங்கிய இலங்கை வீரர் ராஜபக்சே அதைவிட அதிரடியாக பேட்டிங் செய்து வெறும் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக ஆரம்பம் முதலே பஞ்சாப் அணி ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது 10 ரன்களுக்கு மேல் எடுத்து வந்தது.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

கடைசி நேரத்தில் கடைசியில் களமிறங்கிய தமிழக வீரர் சாருக்கான் 24* ரன்கள் எடுக்க அவருடன் ஜோடி சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடென் ஸ்மித் வெறும் 8 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 25* ரன்களை விளாசி யாருமே எதிர்பாராத வண்ணம் பெங்களூருவுக்கு அதிர்ச்சி கொடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் காரணமாக 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்த பஞ்சாப் 6 பந்துகளை மீதம் வைத்து திரில் வெற்றி பெற்றது என்றால் பெங்களூர் அணியின் பவுலிங் எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

மிஸ் யூ சஹால்:
பெங்களூரு அணியின் சுழல் பந்துவீச்சு துறையில் கடந்த பல வருடங்களாக முக்கிய மேட்ச் வின்னிங் பவுலராக வலம் வந்த இந்தியாவின் யூஸ்வென்ற சஹாலை நேற்றைய போட்டியின் போது அந்த அணி ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் அந்த அணியில் நேற்று 10 கோடிக்கும் மேல் வாங்கப்பட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்தாலும் 40 ரன்களை வாரி வழங்கினார். மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் சபாஸ் அஹமட் வெறும் ஒரு ஓவர் மட்டும்தான் வீசினார். ஒருவேளை நேற்றைய போட்டியில் சஹால் விளையாடியிருந்தால் குறைந்தது 2 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூருவின் பக்கம் போட்டியை திருப்பி இருப்பார் என பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.

Chahal 1

இதையே இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்களின் மிகப்பெரிய இழப்பு என்றால் அது யூஸ்வென்ற சஹால் ஆவார். பெங்களூரு அல்லது துபாய் போன்ற மிகச்சிறிய மைதானங்களில் அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். சொல்லப்போனால் அது போன்ற பந்து வீச்சுக்கு சவாலான சிறிய மைதானங்களில் தான் அவர் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதுபோன்ற சவாலான மைதானங்களில் அவர் மிகக் குறைந்த எக்கனாமியில் பந்துவீசியுள்ளார். ஒருவேளை நான் பெங்களூரு அணியில் ஒருவராக இருந்தால் கண்டிப்பாக அவரை போன்ற ஒரு தரமான பவுலரை எந்த ஒரு விலையாக இருந்தாலும் விட்டுக்கொடுத்திருக்கவே மாட்டேன்” என கூறினார்.

தரமான சஹால்:
அவர் கூறுவது போல கடந்த 2013 – 2021 வரை பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த சஹால் 114 போட்டிகளில் 139 விக்கெட்களை எடுத்து பெங்களூரு அணியின் மேட்ச் வின்னராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் போன்ற அளவில் சிறிய மைதானங்களில் எத்தனையோ மிரட்டலான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தைரியமாக பந்துவீசிய அவர் தனது துல்லியமான பந்துவீச்சால் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து பெங்களூர் அணிக்காக நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். சொல்லப்போனால் பெங்களூரு அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே நாளடைவில் இந்திய அணியில் தற்போது ஒரு முக்கிய பந்துவீச்சாளராக சஹால் விளையாடி வருகிறார்.

Sehwag

அப்படிப்பட்ட அவரை தக்கவைக்காமல் விட்ட பெங்களூரு சமீபத்தில் நடந்த ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கோட்டை விட்டது. ஆனால் நானாக இருந்திருந்தால் அது போன்ற ஒரு அற்புதமான பந்து வீச்சாளரை நிச்சயம் எத்தனை கோடியாக இருந்தாலும் வாங்கி இருப்பேன் என வீரேந்திர் சேவாக் வெளிப்படையாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஏலத்தில் கையாளப்படும் அனைத்து விதிமுறைகளும் எனக்கு தெரியும். இருப்பினும் பெங்களூர் அணியில் சஹால் ஒரு முக்கிய பவுலர். அந்த அணி தக்க வைத்துள்ள முகமது சிராஜ் தற்போது இந்திய அணியில் விளையாடி அனுபவங்களை கற்று வருகிறார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனாலும் அதற்காக அவர் மீது அத்தனை பொறுப்புகளையும் சுமத்துவது கடினமான ஒன்று” என கூறினார்.

Advertisement