இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 3 டி20 போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதில் முக்கிய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அணியில் சேர்க்கப் பட்டிருந்தனர். மேலும் இந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விராட் கோலியை கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
“கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இருந்து நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் அவரை நேற்றைய போட்டியில் வெளியே அமர வைத்து விட்டார்கள். அவரது பேட்டிங்கை பற்றி நன்றாகப் பேசலாம். ஏனெனில் டி20 போட்டிகளில் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் எந்த அடிப்படையில் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவரை அமர வைக்க ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்று எனக்கு தெரியவில்லை. அதே நேரத்தில் விராட் கோலியிடம் சென்று நேரடியாக ஏன் தனக்கு வாய்ப்பு கொடுக்கப் படவில்லை என்று ஷ்ரேயாஸ் ஐயர் கேட்க முடியாது. நான் ஒன்று சொல்கிறேன் விதிமுறை என ஒன்று இருந்தால் அது அனைவருக்கும் ஒன்று போல் இருக்க வேண்டும். ஆனால் அணியில் பத்து வீரர்களுக்கு மட்டும்தான் அந்த விதிமுறை பொருந்தும் என்றும் விராட் கோலிக்கு அது பொருந்தாது என்றும் சொல்லாமல் சொல்லி வருகிறார் விராட் கோலி.
அதேநேரத்தில் பேட்டிங் வரிசையில் மோசமாக ஆடினால் கூட தனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். சிறிது இடைவெளி கொடுக்காமல் இருப்பது ஒரு அணியின் கேப்டனுக்கு அழகல்ல“ என்று தெரிவித்திருக்கிறார் வீரேந்தர் சேவாக்.