
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மா சர்மா சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.
அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவர் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 வகையான அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருங்கால கேப்டன்:
இந்நிலையில் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ நியமிக்கும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கணித்துள்ளார். அத்துடன் தற்காலிகமாக ஓரிரு வருடங்கள் மட்டுமே சூரியகுமார் கேப்டனாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“தலைமைப் பண்பை கற்றுக்கொண்டு எப்படி ஒரு அணியை வழி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒருவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார். அந்த வகையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஐபிஎல் தொடரில் அவர் பல நட்சத்திர வீரர்களை கேப்டன்ஷிப் செய்துள்ளார். உண்மையில் இது நீண்ட திட்டமாகும்”
“இந்த முடிவு சொல்வது என்னவெனில் ஹர்திக் பாண்டியா இனிமேல் கேப்டனாக இருக்கப்போவதில்லை என்பதாகும். ரோஹித் போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்று விட்டனர். தற்போதுள்ள அணியில் இயற்கையாக கேப்டனாக இருக்கக்கூடிய ஒரு வீரரை கௌதம் கம்பீர் பார்க்கவில்லை. சூரியகுமாரையும் அவர் தற்காலிக கேப்டனாகவே பார்க்கிறார். அதன் பின் சுப்மன் கில் அடுத்த சில வருடங்களில் கேப்டனாக காலடி வைப்பார்”
இதையும் படிங்க: கேப்டனே இப்படி சொன்னா யார் தான் அசத்த மாட்டாங்க.. சூரியகுமார் கேப்டன்ஷிப் பற்றி அக்சர் படேல் பேட்டி
“ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடும் அவர் தொடர்ச்சியாக அசத்துவது மட்டுமே மீதமுள்ளது. சுப்மன் கில் போன்றவர் 10 வருடத்திற்கு இந்தியாவின் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் தற்போது அவர் தயாராக இல்லை. அதனாலேயே சூரியகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார். முன்னதாக ஆல் ஃபார்மட் பிளேயரான சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காகவே தற்போது துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.