லெஜெண்ட் கபில் தேவின் 36 வருட உ.கோ சாதனையை உடைத்த நெதர்லாந்து கேப்டன்.. புதிய உலக சாதனை

Scott Edwards 2
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து வீழ்த்தியது. இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து போராடி 245/8 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 78* (69) ரன்களும் வேன் டெர் மெர்வி 29, ஆர்யன் தத் 23* (9) ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நெகிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 16, டீ காக் 20, டுஷன் 4, மார்க்ரம் 1, க்ளாஸென் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

சிறப்பான சாதனை:
அதனால் 89/5 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை டேவிட் மில்லர் 43, கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்து காப்பாற்றப் போராடியும் 42.5 ஓவரிலேயே 207 ரன்களுக்கு சுருட்டிய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து சாதனை படைத்தது.

அத்துடன் 2007க்குப்பின் 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்தும் நெதர்லாந்து அசத்தியது. இந்த சரித்திர வெற்றிக்கு 78* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதிலும் குறிப்பாக விக்ரம்ஜித் சிங் 2, மேக்ஸ் ஓ’தாவுத் 18, ஆகர்மேன் 12, பஸ் டீ லீடி 2, எங்கேல்பேர்ச்ட் 19 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டானதால் 82/5 என சரிந்த நெதர்லாந்து 150 ரன்கள் தாண்டாது என்று கருதப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் 7வது இடத்தில் களமிறங்கிய அவர் நங்கூரமாகவும் அதிரடியாகவும் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ரன்கள் குவித்து வெற்றி பெற உதவினார். சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 7வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை உடைத்த அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: வலிக்குது.. ஆஸியை அசால்ட்டா தோற்கடிச்ச நாங்க நெதர்லாந்திடம் அந்த தப்பு பண்ணிட்டோம்.. பவுமா பேட்டி

இதற்கு முன் 36 வருடங்களுக்கு முன் நடைபெற்ற 1987 உலகக்கோப்பையில் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் 7வது இடத்தில் களமிறங்கி 72* (58) ரன்கள் அடித்து அந்த சாதனையைப் படைத்து இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அந்தப் பட்டியல்:
1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*
2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987
3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003
4. தசுன் சனாக்கா : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

Advertisement