ஜிம்பாப்வேயில் சதமே அடித்தாலும் பயனில்லை, அவர் வழியில் விடுங்க – விராட் கோலி பற்றி முன்னாள் நியூசி வீரர் கருத்து

Kohli-2
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்ட அவர் ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக போற்றப்படும் அவர் சுமார் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

kohli 1

- Advertisement -

அதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகள் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அந்த அனைத்து பொறுப்புகளையும் படிப்படியாக ராஜினாமா செய்து சுதந்திர வீரராக விளையாடத் தொடங்கினார். அதனால் சீக்கிரமாக சதமடித்து விமர்சனங்களை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்டாது என முன்பை விட சுமாராக செயல்படுகிறார்.

அதனால் பொறுமையிழந்த கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் விராட் கோலியை அணியிலிருந்து நீக்கும் நேரம் வந்துவிட்டதாக வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்கள். இருப்பினும் 70 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரது வரிசையில் உயர்ந்து நிற்கும் விராட் கோலிக்கு கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான், பாபர் அசாம் போன்ற முன்னாள் இந்நாள் வீரர்கள் விமர்சனங்களையும் மிஞ்சிய ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

VIrat Kohli Knock Out

ஜிம்பாப்வே போங்க:
இதுபோக பல வருடங்களாக ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு உடலிலும் ஆட்டத்திலும் தெரிவதால் உடனடியாக ஐபிஎல் 2022 தொடரை விட்டு பாதியிலேயே வெளியேறி சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு விளையாடினால் தானே ஃபார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த விராட் கோலி சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடி விட்டு நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார்.

- Advertisement -

இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி ஓய்வெடுப்பாரா என்ற விமர்சனத்தையும் சந்திக்கும் விராட் கோலி அடுத்ததாக ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக அவர் பார்முக்கு திரும்புவதை விரும்பும் தேர்வுக்குழு அதற்காக வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் நடைபெறும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் விராட் கோலியை விளையாட வைக்க விரும்புவதாக செய்திகள் வெளியாகின.

BCCI

எந்த பயனில்லை:
பொதுவாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி நிறைய சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி கத்துக்குட்டி ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினால் நிச்சயம் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி விடுவார் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் தரமற்ற போட்டியில் விளையாடி சதமடித்தால் எந்த பயனுமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் விராட் கோலிக்கு இதுபோன்ற அழுத்தங்களை கொடுக்காமல் அவரது வழியில் விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த முடிவு எடுக்கப்பட்டால் விராட் கோலிக்கு எந்த பயனுமில்லை என்று நினைக்கிறேன். அவர் சற்று பெரிய இடைவெளியை எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்புவதையே நான் பார்க்க விரும்புகிறேன். தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடத்திலிருந்து பார்க்கும் போது உலக கோப்பைக்கான 100% திட்டமிடுதலில் அவருக்குப் பெரிய பங்கு இருக்கும் என்று நம்புகிறேன். அதற்காக ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு நிறைய ஃபார்ம் கிடைக்கும் என்று நான் கருதவில்லை”

Styris

“ஒருவேளை அங்கு அவருக்கு எளிதான சதம் கிடைக்கலாம், அது அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம். ஆனால் எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கி நகர்வதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் இந்தியாவின் முக்கிய வீரர் என்று இன்னும் நான் நம்புகிறேன். முதலில் இந்திய தேர்வுக்குழு வெறுமனே சாதாரண அணியை தேர்ந்தெடுப்பதில்லை அல்லது சுமரான வீரர்களை தேர்ந்தெடுப்பதில்லை என்ற செயல்பாட்டில் கவனத்துடன் என்பதை பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

ஆசிய கோப்பைக்கு பின்பாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ளதால் அந்த தொடர்களின் வாயிலாகவும் உலகக்கோப்பைக்கு முன்பாக விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப முடியும் என்று தெரிவிக்கும் ஸ்காட் ஸ்டைரீஸ் அதற்காக அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். மேலும் சதமடிக்கவில்லை என்றாலும் அவர் உலக கோப்பையில் விளையாட தகுதியானவர் என்று இன்னும் நம்புவதாகவும் ஸ்டைரிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement