விராட் கோலியின் மீது என்ன தவறு? நான் இதை ஏத்துக்க முடியாது – கபில் தேவுக்கு பதிலடி கொடுத்த கோலியின் கோச்

Rajkumar
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வருவது பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. கடந்த 2008இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போலவே தனது அபார பேட்டிங் திறமையால் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் சதங்களையும் அடித்து நிறைய வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கடந்த 3 வருடங்களாக 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் சுமாரான பார்மில் திண்டாடி வருகிறார்.

Virat-Kohli

- Advertisement -

இத்தனைக்கும் 3 வகையான இந்திய அணிக்கும் பெங்களூருவுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கேப்டன்சிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அதிலிருந்து படிப்படியாக விலகி கடந்த ஜனவரியில் இருந்து சாதாரண வீரராக விளையாடி வருகிறார். அதனால் சுதந்திர பறவையாக விளையாடும் அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் உட்பட முன்பை விட படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

கபில் தேவின் கருத்து:
அதனால் சில மாதங்கள் ஓய்வு எடுத்து பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் வழங்கிய ஆலோசனையையும் பின்பற்றாத அவர் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என பதிலளித்து தொடர்ச்சியாக விளையாடி வரும் நிலையில் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர் இந்தியா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் விராட் கோலி என்பவர் நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர் என்பதற்காக இதுநாள்வரை ஃபார்மை காரணம் காட்டி இந்திய அணி நிர்வாகம் அவரை நீக்காமல் இருந்து வருகிறது.

kapildev

இருப்பினும் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் அணியில் நீடிக்க முடியும் விராட் கோலி போன்ற பெரிய பெயருடைய வீரர்களாக இருந்தாலும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில்தேவ் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அத்துடன் சிறப்பாக செயல்படும் அஷ்வின் போன்ற நம்பர் ஒன் சுழல்பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் சுமாராக செயல்படும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விராட் கோலியை டி20 அணியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும் நேற்று முன்தினம் மீண்டும் கபில் தேவ் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

70 சதங்கள்:
இந்நிலையில் சர்வதேச அரங்கில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் 70 சதங்களை அடித்து ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று விராட் கோலி நிரூபித்துள்ளதாக கூறும் அவரின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்வதேச அரங்கில் 70 சதங்களை அடித்துள்ளது சிறிய விஷயமல்ல என்று கபில் தேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி மீது கபில் தேவ் வைத்த விமர்சனங்களை நான் ஆதரிக்கவில்லை. அவ்வளவு பெரிய விமர்சனத்தை வைக்கும் அளவுக்கு விராட் கோலி விசயத்தில் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்ட அவரிடம் ஏன் இவ்வளவு சீக்கிரமாக கடுமையாக நடந்து கொள்கிறீர்கள். சர்வதேச அளவில் 70 சதங்கள் அடிப்பது சிறிய விஷயமல்ல. எனவே அவரை இந்திய அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைக்கும் என்று நான் நினைக்கவில்லை” என கூறினார்.

- Advertisement -

அதாவது சர்வதேச அரங்கில் எத்தனையோ தரமான பேட்ஸ்மேன்கள் 50 சதங்களை கூட தொட முடியாத நிலையில் 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி ஏற்கனவே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கும் ராஜ்குமார் தற்போது 33 வயது மட்டுமே கடந்துள்ள அவரை இந்த மோசமான நிலைமையை காரணம் காட்டி வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : விராட் கோலி இப்போ இந்தியாவுக்கு பாரமாக மாறிட்டாரு – முன்னாள் பாக் வீரர் கடுமையான விமர்சனம்

மேலும் இந்த மோசமான தருணத்தில் இருந்து மீண்டு வந்து நிச்சயம் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட் கோலி வருகிறார் என்பதற்காக சிறப்பாக செயல்பட்ட தீபக் ஹூடா பெஞ்சில் அமர வைக்கப்பட்டு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement