கேரியரின் ஆரம்பமே அமர்க்களம், 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான புதிய உலக சாதனை – படைத்த பாக் வீரர்

Saud Shakeel
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வருடமாக தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் மிகச் சரியாக 365 நாட்கள் கழித்து அதே இலங்கைக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. அந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 166 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் கருணாரத்னே 4, குசால் மெண்டிஸ் 6, ஏஞ்சலோ மேத்யூஸ் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தனஞ்செயா டீ செல்வா 57 ரன்களை எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம்-உல்-ஹக் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா சபிக்குடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷான் மசூத் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதை தொடர்ந்து வந்த கேப்டன் பாபர் அசாம் 3வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 39 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சௌத் ஷாக்கீல் தனது பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அவர்களுடன் இணைந்து மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட அப்துல்லா சபிக் இரட்டை சதமடித்து 201 ரன்கள் குவித்து அவுட்டானார். அதே போல மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா சதமடித்து 132* ரன்களும் முகமது ரிஸ்வான் 37 ரன்களும் எடுத்ததால் நிறைவு பெற்ற 3வது நாள் முடிவில் 563/5 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் 57 ரன்கள் எடுத்த சவுத் ஷாக்கீல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 7 போட்டிகளில் தொடர்ந்து 50 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதாவது கடந்த 2022 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் அந்த முதல் போட்டியில் 2 இன்னிங்சிலும் முறையே 37, 76 ரன்களை எடுத்தார். அதே போல இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 63, 94 ரன்கள் எடுத்த அவர் 3வது போட்டியில் 23, 53 ரன்களை எடுத்து அசத்தினார். அதை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 22, 55* ரன்கள் எடுத்த அவர் 2வது போட்டியில் 125*, 32 ரன்கள் எடுத்தார்.

அந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மண்ணில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்றை படைத்து 208*, 30 ரன்களை எடுத்த அவர் நடைபெற்று வரும் 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்துள்ளார். அப்படி அறிமுகமானது முதல் இதுவரை களமிறங்கிய 7 போட்டிகளிலும் தொடர்ந்து குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இன்னிங்கில் அவர் 50க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு பதில் அவர் தான் விளையாடனும் – டிகே கூறும் காரணம் என்ன?

இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 7 போட்டிகளிலும் 50 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை சௌத் ஷாக்கீல் படைத்துள்ளது பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல ஆரம்பத்திலேயே இப்படி அட்டகாசமான துவக்கத்தை பெற்றுள்ள அவர் ஐசிசி தரவரிசையில் விராட் கோலிக்கு பின் 15வது இடத்தைப் பிடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement