ஜாம்பவான் டான் ப்ராட்மேனுக்கு அடுத்தப்படியாக சத்தமின்றி சாதனை படைத்து வரும் இந்திய வீரர் – தேர்வுக்குழு கவனிக்குமா?

Sarfaraz-khan-2
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் இந்த வருடம் 2 பாகங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 38 அணிகள் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தி வரும் இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெற்றன. அதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு லீக் சுற்றுடன் நடையை கட்டிய நிலையில் பெங்கால், ஜார்கண்ட், மும்பை, உத்தரகாண்ட், கர்நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அதை தொடர்ந்து கடந்த ஜூன் 6-ஆம் தேதி பெங்களூருவில் துவங்கிய நாக் அவுட் சுற்றில் முதல் பகுதியான காலிறுதி சுற்றில் நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் கத்துக்குட்டியான உத்தரகாண்ட் அணியை வதம் செய்த மும்பை 725 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது. அதை தொடர்ந்து 41 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள மும்பை 42-வது கோப்பையை வெல்வதற்காக தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேசத்தை எதிர்கொண்டு வருகிறது.

- Advertisement -

ரன் மெஷின் சர்பராஸ்:
அதில் டாஸ் வென்ற உத்தரபிரதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பேட்டிங் செய்து வரும் மும்பை தனது முதல் இன்னிங்ஸ்சில் 393 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் பிரித்வி ஷா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்த வந்த சவேட் பார்க்கர் 32 ரன்களிலும் அர்மன் ஜாபர் 10 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் இளம் வீரர் சர்பராஸ் கான் 40 ரன்களும் சாம்ஸ் முலானி 50 ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் மற்றொரு தொடக்க வீரர் யஷஎஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து 100 ரன்களும் ஹர்டிக் தாம்ரே சதமடித்து 115 ரன்களும் எடுத்து மும்பையை நல்ல நிலைமைக்கு எட்ட வைத்தனர். அதை தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் உத்திர ப்ரதேசம் 2-வது நாள் முடிவில் 25/ என்ற நிலைமையில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் 24 வயது இளம் வீரர் சர்பராஸ் கான் ஒரு ரன் மெஷினை போல் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்களை சேர்த்து வருகிறார். இந்த வருடம் 275, 63, 48, 165, 153, 40 என 1 அரை சதம் 2 சதங்கள் 1 இரட்டை சதம் உட்பட மொத்தம் 744 ரன்களை குவித்துள்ள அவர் இந்த வருட ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் கடைசியாக களமிறங்கிய 14 இன்னிங்சில் 71*(140), 36(39), 301*(391), 226*(213), 25(32), 78(126), 177(210), 6(9), 275(401),63(110), 48(72), 165(181), 153(205), 40 (52) என 3 அரை சதங்கள், 3 சதங்கள், 2 இரட்டை சதங்கள், 1 முச்சதம் என மொத்தமாக 1664 ரன்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

- Advertisement -

ப்ராட்மேனுக்கு பின்:
இதில் ஆச்சரியம் என்னவெனில் இதுவரை அவர் அடித்துள்ள 7 சதங்களையும் 150க்கும் மேற்பட்ட ரன்களாக மாற்றியுள்ளார். இதன் வாயிலாக ரஞ்சி கோப்பை வரலாற்றில் அடித்த முதல் 7 சதங்களையும் “ஆங்கிலத்தில் டாடி ஹண்ட்ரட்” என அழைக்கப்படும் 150+ ரன்களாக மாற்றிய முதல் வீரர் என்ற அரிதான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அதைவிட இதுவரை 23 முதல்தர கிரிக்கெட்டில் 33 இன்னிங்சில் 2252* ரன்களை 80.42 என்ற அற்புதமான சராசரியில் எடுத்துள்ள அவர் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரி கொண்ட 2-வது பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ(குறைந்தது 2000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்):
1. டான் ப்ராட்மேன் : 95.14
2. சர்பராஸ் கான் : 80.42*
3. விஜய் மெர்சண்ட் : 71.64
4. ஜார்ஜ் ஹெட்லி : 69.82
5. பசீர் ஷா : 69.02

இதையும் படிங்க : அந்த டீமா இது ! ஒரே முடிவால் மொத்தமாக மாறிய இங்கிலாந்து டெஸ்ட் அணி – துவங்கிய மிரட்டல் வெற்றிநடை

இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வரும் இவர் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்தில் எதிரணிகளை சொல்லி அடித்து தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்களை குவித்து வருகிறார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படாத காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை தேர்வுக்குழுவினர் இவரை இதுவரை கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியில் இவர் விளையாடுவதற்கு தகுதியானவராக இருப்பதால் விரைவில் இவரைத் தேர்வு குழுவினர் தேர்வு செய்து அவரின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கூறலாம்.

Advertisement