தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததோடு கடைசியாக நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 23 பந்துகளில் 39 ரன்களை குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.
தோனி மற்றும் பண்டின் சாதனையை கடக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன் :
துவக்க வீரராக தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர் அசத்தலாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிராக இன்று நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் அவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான தோனி மற்றும் பண்ட் ஆகியோரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்த போகும் சாதனை யாதெனில் : பல நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் முதலிடத்தில் இருக்கிறார். அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது 8 ஆட்டங்களில் விளையாடி 171 ரன்களை குவித்துள்ளார்.
அதுவே ஒரு தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது தோனி 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 154 ரன்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்து தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 108 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய இறுதிப்போட்டியில் அவர் மேலும் 64 ரன்களை அடிக்கும் பட்சத்தில் தோனி மற்றும் பண்ட் ஆகியோரை தாண்டி ஒரு டி20 தொடரில் அதிக ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : காயமடைந்த பாண்டியா மற்றும் அபிஷேக் ஆகியோர் பைனலில் விளையாடுவார்களா? – மோர்னே மோர்கல் பதில்
அதுமட்டும் இன்றி தற்போது 969 ரன்களுடன் இருக்கும் சஞ்சு சாம்சன் மேலும் 31 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்தும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



