தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையேயான 17-ஆவது லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இறுதி நேரத்தில் சென்னை அணியை கட்டுக்குள் கொண்டு வந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பட்லர்(52), படிக்கல்(38), அஸ்வின்(30), ஹெட்மயர் (30) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது.
இருந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து சி.எஸ்.கே வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறியதும் சென்னை அணி சரிவினை சந்தித்தது. இறுதியில் ஜடேஜா (25) மற்றும் தோனி (32) ஆகியோர் சிறப்பாக போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் :
இந்த வெற்றி ஒரு அணியாக நாங்கள் ஒன்றிணைந்து விளையாடியதற்கு கிடைத்த வெற்றி. பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். அதேபோன்று இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தினோம். சேப்பாக்கத்தில் எனக்கு நல்ல நினைவு கிடையாது. இம்முறை இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டை வீழ்த்தியது எங்களுக்கு நல்ல துவக்கம் என்று நினைத்தேன். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி சிஎஸ்கே அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த போட்டியை நான் கடைசிவரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் தோனி இறுதிவரை பேட்டிங் செய்தால் எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அது பாதுகாப்பானதாக இருக்காது.
இதையும் படிங்க : CSK vs RR : இலக்கை துரத்தி கிட்ட போயி தோத்ததும் நல்லதுதான். தோல்விக்கு பிறகு – எம்.எஸ் தோனி பேசியது என்ன?
ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு பவரான வீரர். அதோடு அவரால் என்ன என்ன செய்ய முடியும் என்பதை நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். எனவே அவருக்கு மரியாதை அளிக்க வேண்டியது அவசியம். எப்படி பந்து வீசினாலும் இறுதி நேரத்தில் அவருக்கு எதிராக நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இம்முறை அவரை நிற்கவைத்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.