ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஏப்ரல் 13-ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பெங்களூரு அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்து தற்போதைய நிலையில் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதே வேளையில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி நான்காவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பவர்பிளே ஓவரிலேயே அவங்க எங்களை முடிச்சிட்டாங்க – சஞ்சு சாம்சன் :
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவிக்க பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 175 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு போதுமான ஒன்றாக தான் இருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் இந்த மைதானம் ஸ்லோவாக இருந்ததால் பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதிலும் குறிப்பாக நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது பகலில் சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்ததால் முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் சற்று சமாளித்து நல்ல ரன் குவிப்பை நோக்கி முன்னேறினோம். இருந்தாலும் பவர்பிளே ஓவர்களிலேயே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் எங்களை வீழ்த்தி விட்டனர். ஏனெனில் பவர்பிளேயிலேயே விக்கெட் இழப்பின்றி அவர்கள் பெரிய ரன் குவிப்பிற்கு சென்றதால் போட்டி அவர்களது பக்கம் திரும்பியது.
நாங்களும் இந்த போட்டியின் போது நிறைய கேட்ச்களை தவறவிட்டோம். அவர்களும் நிறைய கேட்ச்களை தவற விட்டார்கள். ஆனாலும் பெங்களூரு அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பெங்களூரு அணி இன்று போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வீழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : ஷிம்ரன் ஹெட்மயர் முதல் பிலிப் சால்ட் வரை அனைவரது பேட்டையும் செக் பண்ணிய அம்பயர் – எதற்கு தெரியுமா?
நாங்கள் பீல்டிங்கில் இன்னும் நிறைய முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம். அதேபோன்று பேட்டிங்கிலும் இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை என்று நினைக்கிறேன். இதுபோன்ற தவறுகளை கருத்தில் கொண்டு அதனை திருத்திக் கொண்டு மீண்டும் வலுவாக இந்த தொடரில் வெற்றியுடன் திரும்புவோம் என சஞ்சு சாம்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.



