
இந்தியாவில் பிரபல சயீத் முஸ்டாக் அலி டி20 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 26 ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற எலைட் குரூப் ஏ பிரிவு போட்டியில் கேரளா மற்றும் ஒடிசா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஒடிசா 20 ஓவரில் போராடி 176/7 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சமன்ட்ராய் 53, சம்பிட் எஸ் பரல் 40 ரன்கள் எடுத்தார்கள். கேரளாவுக்கு அதிகபட்சமாக கேஎம் ஆசிப் 2, நிதிஷ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக 177 ரன்களை சேசிங் செய்த கேரளாவுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ரோகன் குன்னம்மாள் ஒடிசா பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த சஞ்சு சாம்சன் அவருக்கு கை கொடுக்கும் வகையில் வேகத்தைக் குறைத்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அதைப் பயன்படுத்திய ரோகன் மறுபுறம் ஒடிசா பவுலர்களை வெளுத்து வாங்கி சதத்தை அடித்தார்.
நேரம் செல்ல செல்ல கடைசி வரை அவுட்டாகாமல் ஒடிசாவை பந்தாடிய அந்த ஜோடியால் 16.3 ஓவரிலேயே 177/0 ரன்களை எடுத்த கேரளா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்த அணிக்கு ரோகன் 10 பவுண்டரி 10 சிக்சருடன் 121* (60) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதே போல சஞ்சு சாம்சன் தமது பங்கிற்கு 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51* (41) ரன்கள் விளாசினார்.
இதன் வாயிலாக ஒரு சயீத் முஸ்தாக் அலி டி20 போட்டியில் அதிக ரன்களை குவித்த ஓப்பனிங் ஜோடி என்ற வரலாற்று சாதனையை ரோகன் குன்னும்மாள் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் படைத்துள்ளார்கள். இதற்கு முன் இதே தொடரில் சர்வீசஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியின் ஓப்பனிங் ஜோடியான உர்வில் பட்டேல் – ஆர்யா தேசாய் 174 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: அஸ்வின், கோலி வைரங்களை தொலைச்சுட்டோம்.. இனியாச்சும் இதை செய்ங்க.. கம்பீர், அகர்கரை விளாசிய கைப்
சமீபத்தில் ராஜஸ்தான் அணியிலிருந்த சாம்சன் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதற்காக டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே ஐபிஎல் 2026 தொடரில் இருந்து அவர் சிஎஸ்கே அணிக்காக 18 கோடி சம்பளத்திற்கு விளையாட உள்ளார். அந்த நிலைமையில் அவர் தொடர்ந்து உள்ளூரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.