இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை முடிவதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 25 வருடங்கள் கழித்து ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் 2012க்குப்பின் சொந்த மண்ணில் 12 வருடங்களாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடைபெற்று வந்தது.
அந்த வெற்றி நடை கடந்த நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா காரணமானதாக கருதிய தேர்வுக்குழு இங்கிலாந்து தொடருக்கு முன் அவர்களை கழற்றி விட விரும்பியது. அதற்கு முன் அவர்களாகவே ஓய்வு பெற்றார்கள். தற்போது அவர்கள் இல்லாமலும் சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது.
தொலைந்த வைரங்கள்:
இந்நிலையில் இளம் வீரர்களுக்காக இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கு தகுதியான விராட் கோலி, அஸ்வினை இந்திய அணி தொலைத்து விட்டதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் வேதனை தெரிவித்துள்ளார். வெற்றிக்கு இனிமேலாவது அதிக ஆல் ரவுண்டர்களை சேர்க்காமல் அதிகப்படியான மாற்றங்களை செய்யாதீர்கள் என்றும் அவர் கௌதம் கம்பீரை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நியூஸிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் சந்தித்த தோல்விக்கு பின்பும் நம்முடைய கண்கள் திறக்கப்படவில்லை. அதற்கான பழி விராட், ரோஹித் மேலே போடப்பட்டது. வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் 150 ரன்கள் அடித்தும் சர்பராஸ் கான் நீக்கப்பட்டார். கௌகாத்தி போட்டியில் நித்திஷ் ரெட்டிக்கு பின் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தார். இப்படி அங்கே தொடர்ச்சியான தவறுகள் செய்யப்படுகிறது”
ஃகைப் விமர்சனம்:
“3வது இடத்தில் விளையாடிய சுந்தர் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலில் அவர் 3வது இடத்திலேயே விளையாடியிருக்கக்கூடாது. விராட், ரோஹித், புஜாரா, அஸ்வின், ஷமி ஆகியோரை அவர்கள் (அகர்கர், கம்பீர்) கழற்றி விட்டார்கள். ஒருவேளை வெளிப்படையான பேச்சுவார்த்தை நடந்திருந்தால் விராட் ஓய்வு பெற்றதை நிறுத்தியிருக்கலாம். இந்தியாவில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை என்று சொல்லி அஸ்வின் ஓய்வையும் தடுத்திருக்கலாம்”
“இளைஞர்களின் தேடுதலில் நாம் நம்முடைய வைரங்களை தொலைத்தோம். புஜாரா போல 3வது இடத்தில் யாருமே இல்லை. அங்கே புதிய வீரர்களுக்கும் அவர்கள் தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பதில்லை. இந்தியாவில் யார் 6 பவுலர்களை விளையாடு வைப்பார்கள்? அங்கே வெற்றி பெற அஸ்வின், ஜடேஜாவே போதுமானவர்கள்”
இதையும் படிங்க: 10 சிக்ஸ் 37 பந்தில் 119 ரன்ஸ்.. ரிஷப் பண்ட்டின் 8 வருட சாதனையை உடைத்த சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேல்
“நித்திஷ் ரெட்டி அதிகம் பவுலிங் செய்யவே இல்லை. 2004இல் இந்தியாவில் வென்ற போது ஆஸ்திரேலியா அணியில் மெக்ராத், லீ, கில்லஸ்பி, வார்னே ஆகிய 4 முதன்மை பவுலர்கள் மட்டுமே இருந்தனர். 7 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். ஆனால் இங்கே இந்தியா 6 பவுலர்களை விளையாட வைத்து தொடர்ந்து தவறு செய்கின்றனர்” என்று கூறினார்.



