
அடுத்த ஆண்டு நடைபெற விருக்கும் 2026 டி20 உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மிக முக்கியமான மாற்றமாக துணை கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் மீண்டும் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் துவக்க வீரராகவும் களமிறக்கப்பட்டார். அதனால் துவக்க வீரராக சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழந்தார். ஆனால் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சுப்மன் கில் பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார்.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு முழுவதும் டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான பார்மை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 5 ஆவது டி20 போட்டியில் மீண்டும் சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் காரணமாகவே சுப்மன் கில் வெளியேற்றப்பட்டு சஞ்சு சாம்சன் டி20 அணியில் முதன்மை துவக்க வீரராக இடம்பிடித்துள்ளார். அதேவேளையில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷனும் 2026 டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதனால் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். தற்போதைய நிலைமையின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் தான் அபிஷேக் சர்மாவுடன் களமிறங்குவார். ஏனெனில் இந்த ஆண்டு மட்டும் அவர் 3 சதங்களை விளாசியுள்ளார். அதேபோன்று அபிஷேக் சர்மாவுடன் அவரது பார்ட்னர் ஷிப் அருமையாக இருந்து வருகிறது. அதன் காரணமாக அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்பது உறுதி.
இதையும் படிங்க : குறைந்தது 2 போட்டியிலாவது ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு உத்தரவு போட்டுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ
ஒருவேளை இந்த டி20 உலககோப்பை தொடரின் பொது சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டு அந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டால் மட்டுமே இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாட வாய்ப்புள்ளது. மற்றபடி இஷான் கிஷான் பேக்கப் விக்கெட் கீப்பராகவே இந்திய அணியில் இருப்பார் என்றும் தெரிகிறது.