சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியது. எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஹசாரே தொடரின் 2 போட்டியில் விளையாடனும் : பி.சி.சி.ஐ உத்தரவு
இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்தியாவில் நடைபெறும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ உத்தரவிட்டுள்ளது.
அதன்காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த தொடரில் விளையாட இருக்கின்றனர். குறிப்பாக நியூசிலாந்து தொடர் இருந்தாலும் அதற்கு முன்னர் அனைவரும் குறைந்தது 2 போட்டிகளிலாவது விளையாட வேண்டும் என பி.சி.சி.ஐ இந்திய வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்காரணமாக மும்பை அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவும் இந்த தொடரில் விளையாடுவார் என்று தெரிகிறது. அதனால் மும்பை அணியில் பல்வேறு நட்சத்திரங்கள் இடம்பெற உள்ளனர்.
அதேபோன்று டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தலைமை தாங்கவுள்ளார். அவரது தலைமையின் கீழ் விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவார் என்று தெரிகிறது. அதேபோன்று டெல்லி அணியின் துணை கேப்டனாக ஆயுஷ் பதோனி விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கோலி மாதிரி சூரியகுமார் இதை நிரூபித்திருக்காரு.. அதான் கில் மாதிரி கழற்றி விடப்படல.. கைஃப் பேட்டி
மேலும் 2026 டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார். அதோடு அவருடன் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் விளையாட இருக்கின்றனர். இப்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த தொடரில் விளையாட இருப்பதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.



