ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சுப்மன் கில் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட முடியாமல் திண்டாடிய அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
இருப்பினும் துணைக் கேப்டன் என்பதால் அவருக்கு உலகக் கோப்பையிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்திய அணியின் நலனை விட எதுவும் முக்கியமில்லை என்று கருதிய தேர்வுக்குழு அவரை கடைசி நேரத்தில் கழற்றி விட்டது. அதைப் பார்க்கும் சில ரசிகர்கள் அப்படியே சூரியகுமாரையும் கழற்றி விட்டிருக்கலாமே என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
கில்லும் – சூரியகுமாரும் ஒன்றில்ல:
ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் தடுமாறி வரும் சூரியகுமாரும் 2025ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் விராட் கோலியை போல சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தன்னை மேட்ச் வின்னராக நிரூபித்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே சுப்மன் கில் போல அவர் நீக்கப்படவில்லை என்று விளக்கும் கைஃப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கில் – சூர்யகுமார் ஆகியோருக்கிடையே வித்தியாசம் இருக்கிறது. சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் திடமான நிரூபிக்கப்பட்ட மேட்ச் வின்னர். இதற்கு முன் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்துள்ள அவர் நிறையப் போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்”
விராட் கோலி போல:
“எனவே அவர்களை நீங்கள் ஒப்பிட முடியாது. சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் இன்னும் தன்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். 2019க்குப்பின் 2 வருடங்கள் சதமடிக்காமல் தடுமாறிய அவர் 10 வருடங்களாக மேட்ச் வின்னராக இருந்தார். எனவே தொடர்ந்து ஆதரவு கொடுத்ததைப் பயன்படுத்திய அவர் மீண்டும் ரன்கள் அடிக்கத் துவங்கினார். சூரியகுமாரும் அதே வகையைச் சேர்ந்தவர்”
இதையும் படிங்க: நடத்தை கெட்ட இளம் இந்திய வீரர்கள் மேல்.. ஐசிசியில் புகார் செய்வோம்.. பாக் தலைவர் பேட்டி
“கில் டி20 கிரிக்கெட்டில் சூரியகுமாரை நெருங்கக்கூட முடியாது. அதனால் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதியான சூரியகுமாருக்கு ஆதரவளிக்க வேண்டிய நீங்கள் அவரால் ஏன் ரன்களை அடிக்க முடியவில்லை? கேப்டன்ஷிப் அழுத்தம் ஏற்பட்டுள்ளதா? என்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். இங்கே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி, சூரியகுமார் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



