துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அத்தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2வது முறையாக அண்டர்-19 ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 347 ரன்களை குவித்து அசத்தியது. ஆனால் அடுத்து விளையாடிய இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரேவை அவுட்டாக்கிய பாகிஸ்தான் பவுலர் அலி ராசா விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடினார்.
நடத்தை கெட்ட இளம் இந்தியா:
அப்படி கொண்டாடுகையில் அவர் சில வார்த்தைகளைச் சொன்னதாகத் தெரிகிறது. அதனால் கோபமடைந்த ஆயுஷ் மாத்ரே சில ஹிந்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி அவருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டு திரும்பினார். அதே போல அதிரடியாக விளையாட முயற்சித்த இந்தியாவின் வைபவ் சூரியவன்சியை அவுட்டாக்கிய அலி ராசா மீண்டும் வெறித்தனமாக விக்கெட்டை கொண்டாடிய போது சில வார்த்தைகளை சொன்னார்.
அதனால் கோபமடைந்த சூரியவன்சி தம்முடைய காலணிகளை காண்பித்து சில வார்த்தைகளைச் சொல்லி அவருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டு பெவிலியன் திரும்பினார். அதைப் பார்த்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் சர்பராஸ் அஹ்மத் தற்போதைய இளம் இந்திய அணியின் நடத்தை சரியில்லை என்று விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன் நான் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ளேன். அப்போதைய இந்திய அணி விளையாட்டை மதித்தது”
பாகிஸ்தான் புகார்:
“ஆனால் வெளியே அமர்ந்திருந்த போது இப்போதைய இந்திய அணியின் நடத்தை விளையாட்டுக்கு நல்லதல்ல என்பதையும், இந்திய அணியின் நடத்தை நெறிமுறை முறையற்றது என்பதையும் உணர்ந்தேன். இந்திய வீரர்கள் செய்த செய்கைகளை நீங்கள் திரையில் பார்த்தீர்கள். ஆனால் நாங்கள் வெற்றியை விளையாட்டுணர்வுடன் கொண்டாடினோம். அதை இந்தியா செய்யாதது அவர்களுடைய சொந்த செயல்” என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: இளம் இந்திய அணியின் நடத்தை சரில்ல.. தோனி, கோலி டீம் கண்ணியமா இருந்தாங்க.. சர்பராஸ் விமர்சனம்
இந்நிலையில் இந்திய அணியின் மோசமான நடத்தை பற்றி ஐசிசியில் புகார் செய்வோம் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அண்டர்-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை தூண்டி விடும் வகையில் வந்தனர். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ஐசிசியிடம் முறையாகத் தெரிவிக்கும். ஏனெனில் அரசியலும் விளையாட்டும் எப்போதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.



