ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தது. சண்டிகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, ரியான் பராக் 43*, கேப்டன் சாம்சன் 38 ரன்கள் எடுத்தனர்.
அதைத் துரத்திய பஞ்சாப் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 155-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 62 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் காரணமாக பஞ்சாப் தங்களது முதல் தோல்வியைப் பதிவு செய்த நிலையில் ராஜஸ்தான் தங்களது 2வது வெற்றியை பெற்றது.
டெட்லீ காம்போ:
இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜோப்ரா ஆர்ச்சர் 150 கி.மீ வேகத்திலும் சென்னைக்கு எதிரான போட்டியில் தோனியை ஃபினிஷிங் செய்ய விடாத சந்தீப் சர்மா 115 கி.மீ வீசக்கூடியவர்கள் என்று ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். அப்படிப்பட்ட அவர்கள் தங்களது அணியில் எதிரணிகளுக்கு ஆபத்தைக் கொடுக்கும் பவுலர்களாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும் கடைசி பந்து வரை தங்களது செயல்முறைகளைப் பின்பற்றி பஞ்சாப்பை தோற்கடித்ததாகக் கூறும் சாம்சன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பவர்பிளேவை நாங்கள் துவங்கிய விதத்தில் கொஞ்சம் குறைவாக ரன்கள் எடுத்தோம் என்று கருதினோம். ஆனால் எங்களிடமிருந்து தரமான பேட்ஸ்மேன்கள் காரணமாக 205 ரன்களை எடுத்தோம். அது மிகவும் நல்ல ஸ்கோர்”
கடைசி பந்து வரை:
“எங்கள் பேட்டிங் வரிசையில் இளமையாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்காக நிறைய விளையாடியுள்ளனர். ஆர்ச்சர், சந்தீப் ஆகியோர் டெட்லீ காம்போ. ஒருவர் 150, மற்றொவர் 115 கி.மீ வேகத்தில் வீசக்கூடியவர்கள். அதனால் அழுத்தமான ஓவர்களில் அவர்களை நான் அதிகம் நம்புகிறேன். ஆர்ச்சர் வேகமாக வீசும் போது அவரை நாங்கள் விரும்புகிறோம். கடந்த 4 வருடங்களாக எங்களுக்காக விளையாடும் அவர் இந்தியாவில் தற்சமயத்தில் வேகமாக பௌலிங் செய்யக்கூடியவர்”
இதையும் படிங்க: இது புஸ்வானம்’ப்பா.. தோனி – சங்கர் டெஸ்ட் ஆட்டத்தை பார்த்து தூங்கிய சிஎஸ்கே வீரர்.. கலாய்த்த சித்து
“தண்ணீர் இடைவெளியில் நாங்கள் சிறிய மீட்டிங் போட்டோம். அதில் பஞ்சாப் நல்ல அணி என்பதால் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் கடைசிப் பந்து வரை வெற்றி உறுதியாகக் கிடைக்காது என்று சொன்னேன். நாங்கள் செயல்முறைகளில் கவனம் செலுத்தினோம். அது வெற்றி முடிவைப் பார்த்துக் கொண்டது. இன்னும் நேரம் எடுத்து எங்களது அணியில் சிறந்த கலவை, பேட்டிங் வரிசை போன்றவற்றை கண்டறிய வேண்டும். ஏனெனில் இது பெரியத் தொடர்” என்று கூறினார்.



