
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. முன்னதாக அந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் முதன்மைப் போட்டிகளில் ரிஷப் பண்ட்டை கேப்டன் ரோஹித் சர்மா தேர்ந்தெடுத்தார். அது இந்தியாவின் வெற்றியிலும் பங்காற்றியது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள் என்று ரோகித் சர்மா தம்மிடம் தெரிவித்ததாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ஆனால் டாஸ் வென்ற பின் சூழ்நிலையின் காரணமாக வாய்ப்பு கொடுக்காததற்காக தம்மிடம் ரோகித் மன்னிப்பு கேட்டதாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஃபைனலில் எனக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். அதில் விளையாட தயாராக இருக்குமாறு என்னிடம் சொல்லப்பட்டது”
“முடிவில் டாஸ் வென்ற பின் அதே அணியுடன் விளையாட உள்ளதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். டாஸ் முடிந்த பின் ரோகித் பாய் என்னிடம் அதற்காக மன்னிப்பு கேட்டார். அப்போது பரவாயில்லை என்ற மனநிலையிலேயே நான் இருந்தேன். மேலும் ரோகித் என்னை அழைத்துச் சென்று அந்த முடிவை பற்றி புரிய வைத்தார். அப்போது முதலில் நாம் போட்டியை வெல்வோம். பின்னர் இது பற்றி பேசலாம். நீங்கள் போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன்”
“ஒரு நிமிடம் கழித்து மீண்டும் என்னிடம் வந்த ரோகித் மனதிற்குள் நீங்கள் எனக்கு சாபம் விடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது போல் நான் உணர்கிறேன் என்று சொன்னார். அவரிடம் ஒரு வீரராக நான் விளையாடவே விரும்புகிறேன் என்று சொன்னேன். ஏனெனில் சிறு வயது முதலே அதற்காக நான் காத்திருந்தேன். எனவே கடைசியில் ரோகித் சர்மா போன்ற ஒருவர் தலைமையில் விளையாடாதது வாழ்நாள் முழுவதும் எனக்கு வருத்தமாகவே இருக்கும்”
இதையும் படிங்க: எதை சொன்னாலும் கேக்க மாட்றாரு.. ரஞ்சி அணியில் இருந்தும் கழட்டிவிடப்பட்ட ப்ரித்வி ஷா – இதுதான் காரணம்
“இருப்பினும் அணிக்காக ரோகித் சர்மா அந்த முடிவை எடுத்தார். ஆனால் அப்போது மற்ற வீரர்களிடம் கவனத்தை செலுத்தாமல் அவர் அந்த முடிவு பற்றி என்னிடம் அதை விளக்குவதில் கவனம் செலுத்தினார். அந்த தருணத்தில் என் இதயத்தில் ஒரு இடத்தை வென்ற அவர் வாழ்நாள் முழுவதும் இருப்பார்” என்று கூறினார்.