
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கு முன் சில வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிக்கு விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அது போக தம்மை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சனே ராஜஸ்தான் அணியிடம் கேட்டுக் கொண்டதாக கிரிக்பஸ் இணையத்தில் நேற்று புதிய செய்தி வெளியானது.
அதிலிருந்து நெருப்பின்றி புகையாது என்பது போல் அடுத்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக சாம்சன் விளையாட மாட்டார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி தம்முடைய உலகம் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“ராஜஸ்தான் ராயல்ஸ் என்றால் எனக்கு உலகமாகும். ஏனெனில் கேரளாவின் ஒரு கிராமத்திலிருந்து வந்த சிறிய குழந்தை தன்னுடைய திறமையைக் காண்பிக்க விரும்பியது. அப்போது ராகுல் டிராவிட் சார் மற்றும் மனோஜ் படலே சார் ஆகியோர் நான் எதனால் செய்யப்பட்டவன் என்பதை இந்த உலகிற்கு காண்பிப்பதற்கான வாய்ப்பையும் இடத்தையும் எனக்கு கொடுத்தார்கள்”
“ஆரம்பக் காலங்களில் அவர்கள் என்னை முழுமையாக நம்பினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் என்னுடைய பயணம் சிறப்பாக இருந்தது. அத்தகைய அணியில் இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அங்கே விளையாடியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு” என்று கூறினார். முன்னதாக 2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக சம்சானுக்கு வாய்ப்பு கொடுத்தது.
அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடியதாலயே நாளடைவில் அவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். அதன் பின் வேறு சில அணிகளுக்கு விளையாடிய அவர் மீண்டும் ராஜஸ்தானுக்கு வந்த போது கேப்டன்ஷிப் பதவி கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு (2008) பின் ராஜஸ்தானை ஃபைனலுக்கு (2021) அழைத்துச் சென்ற கேப்டன் பெருமையை சாம்சன் பெற்றார்.
இதையும் படிங்க: நைட்வாட்ச்மேனாக 66 ரன்ஸ் அடிக்க இந்த திட்டத்தை செஞ்சேன்.. ஓவலில் ஜெய்க்க ரசிகர்கள் முக்கிய காரணம்.. ஆகாஷ் தீப் பேட்டி
சமீப காலங்களாகவே சாம்சன் அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட அவர் தற்போது ராஜஸ்தானை விட்டு வெளியேறப் போகிறாரா என்பதை அஸ்வினுக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லவில்லை. எனவே அடுத்த வருடம் அவர் ராஜஸ்தானுக்கு விளையாடுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.