- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிசிசிஐ மீது கோபத்தில் ரசிகர்கள் – தொடர் புறக்கணிப்பு பற்றி முதல் முறையாக மௌனம் கலைத்த சாம்சன் பேசியது இதோ

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் அறிமுகமானது முதல் சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதும் காலம் காலமாக வாய்ப்புக்கு ஏங்கி வரும் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்கப்படாமல் கழட்டி விட்டதும் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கடந்த 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமாக களமிறங்கினாலும் 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து தான் விளையாடினார்.

அதன்பின் 1 வருடத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை என தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து கேப்டனாக ராஜஸ்தானை ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்குப்பின் பைனலுக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் கழற்றி விடப்பட்டதால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

- Advertisement -

அதனால் வேறு வழியின்றி அடுத்ததாக நடந்த அயர்லாந்து டி20 தொடரில் அவருக்கு தேர்வுக்குழு வாய்ப்பளித்தது. அதில் முதல் போட்டியில் அணி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

கோபத்தில் ரசிகர்கள்:
அதனால் அதுவரை கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதால் புறக்கணித்த தேர்வுக்குழு இனிமேலாவது தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் கழற்றிவிடப்பட்ட சஞ்சு சாம்சன் அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டார். குறிப்பாக ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் முதல் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

அதனால் விளையாட்டில் அரசியல் செய்வதாகவும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப் படுவதாகவும் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவை சரமாரியாக விமர்சிக்கும் ரசிகர்கள் வாய்ப்பை மறுக்க மறுக்க சஞ்சு சாம்சனுக்கு மலை போன்ற ஆதரவை கொடுத்து வருகின்றனர். அத்துடன் கோபத்தைத் தணிப்பதற்காக விரைவில் இந்தியா ஏ பங்கேற்கும் அணிக்கு கேப்டனாக அவரை அறிவித்தும் ரசிகர்களின் கோபம் தணியவில்லை.

சாம்சன் கோரிக்கை:
இந்நிலையில் ரிஷப் பண்ட் அல்லது கேஎல் ராகுல் ஆகியோரும் இந்தியாவுக்காக விளையாடுவதால் அவரை போட்டியாக நினைக்கவில்லை என்று தெரிவிக்கும் சஞ்சு சாம்சன் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக ரசிகர்கள் யாரையும் விமர்சிக்கவோ திட்டவோ வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் அணியில் யாருக்கு பதில் சஞ்சு சாம்சன சேர்க்கலாம் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன”

“அவரை ரிஷப் பண்ட் அல்லது கேஎல் ராகுலுக்கு பதில் சேர்க்கலாமா என்று பேச்சுகள் இருக்கின்றன. ஆனால் கேஎல் ராகுல் மற்றும் பண்ட் ஆகிய இருவருமே என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய அணி வீரர்களுடன் நான் போட்டிப் போட்டால் அது என்னுடைய நாட்டை வீழ்த்துவது போல் அமையும். ஆனால் 5 வருடங்கள் கழித்து இந்திய அணியில் நான் கம்பேக் கொடுத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”

“5 வருடங்களுக்கு முன்பாகவே நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியா இப்போது அதை விட உயர்ந்த நிலையில் இருக்கிறது. அதனால் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக இடம் பிடிப்பது மிகப்பெரிய சவாலாகும். அதே சமயம் நீங்கள் உங்களைப் பற்றி நன்றாக நினைத்துக் கொண்டு சரியான பாதையில் நடந்து நேர்மறையாக சிந்திப்பது அவசியமாகும்” என்று கூறினார். இதை பார்க்கும் ரசிகர்கள் இப்போது கூட அணிக்காக நல்ல மனதுடன் தேசத்துக்காக ஆதரவுடன் பேசும் இவருக்கு இனிமேலாவது அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறுகின்றனர்.

- Advertisement -
Published by