IPL 2023 : நீங்க தோனி தலைமையில் விளையாடினால் தான் ஜொலிக்க முடியும் – இந்திய வீரருக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

Sanjay
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக இந்த தொடரில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை நெருங்கிய நிலையில் சுமாராக செயல்பட்ட சில மூத்த வீரர்களில் கர்நாடகாவை சேர்ந்த மயங் அகர்வால் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படாமல் ஏமாற்றத்தை கொடுத்தார். கடந்த 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2019 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதே போல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் 2019, 2020, 2021 சீசன்களில் முறையே 332, 424, 441 என பெரிய ரன்களை அடித்து அட்டகாசமாக செயல்பட்ட அவரை கடந்த சீசனில் 12 கோடிக்கு தக்க வைத்த அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. ஆனால் ரவீந்திர ஜடேஜாவை போலவே இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அழுத்தத்தில் தடுமாறிய அவர் அணியின் நலனுக்காக தனது ஓப்பனிங் இடத்தை மற்ற வீரர்களுக்கு கொடுத்து 3, 4வது இடத்தில் விளையாடி 196 ரன்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

தோனி தலைமையில்:
போதாக்குறைக்கு இதர வீரர்களும் கை கொடுக்கத் தவறியதால் வழக்கம் போல லீக் சுற்றுடன் வெளியேறிய பஞ்சாப் தோல்விக்கு அவர் தான் காரணம் என்று நினைத்த அந்த அணி நிர்வாகம் மொத்தமாக கழற்றி விட்டது. அந்த நிலையில் இந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக 8.25 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் 10 போட்டிகளில் 270 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராகவே செயல்பட்டார். குறிப்பாக அதிரடியாக விளையாடக்கூடிய அவர் ஆரம்பம் முதலே தடுமாறி பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன பின் மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் ஒரு வழியாக 83 (46) ரன்களை விளாசிய போது ஹெல்மெட்டை கழற்றி மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக கொண்டாடினார்.

அந்த வகையில் நல்ல திறமை வாய்ந்த அவர் கடைசி 2 சீசன்களில் சுமாராக செயல்பட்டாலும் அடுத்த வருடம் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் சிவம் துபே, ரகானே போல இதர அணிகளில் தடுமாறும் மயங் அகர்வால் தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாடினால் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எனது மனம் மயங் அகர்வாலுக்காக ஆதங்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவைச் சேர்ந்த கிளாஸ் நிறைந்த வீரரான அவர் சமீபத்திய வருடங்களில் வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி தனது வெற்றி பாதையில் தொலைந்து விட்டார். குறிப்பாக சாதிக்க வேண்டும் என்ற பசியுடன் இருந்த போது கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பதவி அவரை வீழ்த்தி விட்டது. இப்போதைக்கு ஏதோ ஒரு நாள் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என்று நான் நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் அந்த அணியின் கலாச்சாரத்தில் தான் இவரால் மலர்ந்து செயல்பட முடியும்”

“எம்எஸ் தோனியும் அவரை போன்ற அணியை முதலாவதாக மதிக்கும் வீரர்களை தான் விரும்புவார். அவர் நல்ல மனம் கொண்ட சிறப்பான வீரர்” என்று கூறினார். முன்னதாக டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியின் முடிவில் சொந்த செயல்பாடுகளை விட அணியின் நலனுக்காக செயல்பட்டு நாக் அவுட் போட்டியில் அசத்தும் வீரர்களை தேர்வு செய்வதே சென்னை அணியின் வெற்றிக்கான ரகசியம் என்று தோனி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:Qualifier 1 : இன்றைய குவாலிபையர் 1 போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

குறிப்பாக 10% தன்னம்பிக்கையுடன் சென்னை அணிக்குள் வரும் வீரர்களுக்கு கூட நாங்கள் அவர்களை 50% பொருந்துபவராக மாற்றி வாய்ப்பு கொடுப்போம் என்று தோனி கூறியிருந்தார். அந்த வகையில் சொந்த சாதனையை விட அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணத்தை கொண்ட மயங் அகர்வால் சென்னை அணியில் தோனி தலைமையில் விளையாடினால் அசத்துவார் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement