ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்றது. ஆனால் பெங்களூரு மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்தப் போட்டிகளில் சென்னை அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக ஜாம்பவான் முன்னாள் கேப்டன் தோனி விமர்சிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக 8, 9 போன்ற கீழ் வரிசையில் களமிறங்கும் அவர் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் செய்தால் சென்னை தோல்வியை சந்தித்திருக்காது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் 43 வயதாகும் தோனி சமீபத்திய வருடங்களாகவே முழங்கால் வலியால் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் அவரால் முழுமையாக 10 ஓவர்கள் விளையாட முடியாது என்று சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். அதனாலேயே தோனி கீழே விளையாடி வருவதாகவும் அவர் தெளிவு படுத்தினார்.
சென்னையின் போனஸ்:
அதே சமயம் கேப்டனுக்கு ஆலோசனை கொடுப்பது, வேகமாக விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற விஷயங்களால் தோனி இப்போதும் தங்களது விலை மதிப்புள்ள வீரராக இருப்பதாகவும் பிளம்மிங் ஆதரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே பிராண்ட் என்ற ஒரே நோக்கத்தில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது ரசிகர்களை ஈர்ப்பதற்காகவே தோனி சென்னை அணியில் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் மகத்தான கேப்டன்ஷிப் கொண்ட அனுபவம் தோனி விளையாடுவது சென்னை அணிக்கு போனஸ் என்று அவர் கூறியுள்ளார். எனவே அந்த போனஸை சரியாகப் பயன்படுத்த சிஎஸ்கே அணி தோனியை கேப்டனாக செயல்பட வைக்க வேண்டும் என்று மஞ்ரேக்கர் வித்தியாசமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பேசாம கேப்டனாக இருக்கலாம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் இதைப் பெரிய திரையில் பார்க்கிறேன். இந்த வருடம் மட்டுமின்றி கடந்த வருடத்திலிருந்தே தோனி ஒரு வீரராக இருப்பதை விட பிராண்டாக விளையாடி வருகிறார். சென்னை தங்களது பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் போது எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்வதில்லை. ஏனெனில் அங்கே தோனி இருக்கிறார்”
இதையும் படிங்க: யார் இந்த அஸ்வனி குமார்? மும்பை அணி இவரை எங்கிருந்து கொண்டு வந்தது தெரியுமா? – சுவாரசிய தகவல் இதோ
“தோனி அவர்களுக்கு ஒரு போனஸ் போன்றவர். அவர் வித்தியாசமான வேலையைக் கொண்டுள்ளார். ஒருவேளை தோனி இப்படியே பேட்டிங்கில் மிகவும் தாமதமாக விளையாட வந்தால் அதற்கு பேசாமல் அவர் கேப்டனாக செயல்படலாம் என்று நினைக்கிறேன். இப்போதும் அவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். ஆனால் கேப்டனாக அவரால் இன்னும் அதிக பங்காற்ற முடியும். தற்சமயத்தில் அவர் குறைவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்” என்று கூறினார்.



