IPL 2023 : சுயநலமின்றி விளையாடும் அவரை பாருங்க, அந்த இடத்துல ஏன் பெட்டி பாம்பா அடங்குறீங்க – விராட் கோலியை விமர்சித்த மஞ்ரேக்கர்

Virat Kohli Sanjay Manjrekar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை களமிறங்கிய 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. குறிப்பாக ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான தங்களுடைய 6வது போட்டியில் 556 நாட்கள் கழித்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தலைமையில் மிரட்டலாக செயல்பட்ட பெங்களூரு 24 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

Siraj 1

- Advertisement -

அந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக செயல்பட்ட டு பிளேஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆரம்ப முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 137 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் கூட 16.1 ஓவர்கள் வரை நிலைத்து நின்று நல்ல தொடக்கத்தை கொடுத்த அவர்கள் பவர் பிளே ஓவர்களுக்கு பின் சற்று மெதுவாக விளையாடினர். குறிப்பாக டெத் ஓவர்கள் துவங்கும் வேளையில் அதிரடியை துவக்காமல் அவுட்டான அந்த ஜோடி எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்க தவறியது. அதனால் அடுத்து வந்த மேக்ஸ்வெல் 0, தினேஷ் கார்த்திக் 7 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டிய நிலையில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள்.

என்ன மாயம் தெரியல:
அதனால் 200 ரன்களை எடுப்பதற்கு தேவையான நல்ல தொடக்கத்தை பெற்ற பெங்களூரு இறுதியில் 20 ஓவரில் 174/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கம் போல அதிரடியான துவக்கத்தை பெற்றாலும் 40 பந்துகளில் 50 ரன்களை எடுத்து இறுதியில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (47) ரன்களை 125.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தது மற்றொரு காரணமாக அமைந்தது.

ஆனால் மறுபுறம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடி காட்டிய டு பிளேஸிஸ் 84 (56) ரன்களை 150.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். இறுதியில் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி பஞ்சாப்பை 18.2 ஓவரிலேயே 150 ரன்களுக்கு சுருட்டி அதிரடியான வெற்றி பெற்றது. இந்நிலையில் அப்போட்டியில் டு பிளேஸிஸ் சுயநலமின்றி அதிரடியாக செயல்பட்டதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விராட் கோலி மெதுவாக விளையாடியது பெங்களூரு எக்ஸ்ட்ரா 25 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை நழுவ செய்ததாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் பொதுவாகவே 40 ரன்கள் தொடும் அவர் அதன் பின் 50 ரன்களை தொடுவதற்கு மெதுவாக விளையாடுவது புரியாத புதிராக இருப்பதாக தெரிவிக்கும் மஞ்ரேக்கர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியதற்கு பின்வருமாறு. “அவர்களின் அதிரடியான துவக்கம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் இறுதியில் அவர்கள் எடுத்த ஸ்கோர் எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை. இருப்பினும் பகல் வேளையில் நடைபெற்ற அந்த போட்டியின் பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவாக மாறியது பெங்களூருவின் வெற்றிக்கு நம்பிக்கை கொடுத்தது”

Sanjay

“இருப்பினும் மிகச் சிறந்த தொடக்கத்தைப் பெற்ற அவர்கள் கண்டிப்பாக 25 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்திருக்கலாம். அந்த இடத்தில் அப்படி விளையாடும் விராட் கோலியை நாம் நீண்ட காலமாக பார்த்து வருகிறோம். குறிப்பாக பவுலர்கள் வேகத்தை குறைத்து வீசும் போது அவர் தடுமாறுகிறார். அதைக் கடந்த ஐபிஎல் தொடரிலும் பார்த்தோம். அதை விட 40 ரன்களை தொட்டதும் அவர் சற்று மெதுவாக விளையாடுகிறார். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க:

“ஆனால் டு பிளேஸிஸ் சுயநலமின்றி விளையாடினார். அதனால் சதமடிக்கும் வாய்ப்பையும் பெற்ற அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்து பந்திலும் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். அந்த மாதிரியான பேட்டிங்கை தான் நாம் பார்க்க விரும்புகிறோம்” என்று கூறினார். முன்னதாக 40 ரன்கள் தொட்டதும் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி சுயநலத்துடன் மெதுவாக விளையாடுவதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement