
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை நழுவ விட்டு வருகிறது. ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்த விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 544/7 ரன்களை அடித்து இந்தியாவை விட 186 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94, ஓலி போப் 71, ஜோ ரூட் 150, கேப்டன் ஸ்டோக்ஸ் 77* ரன்கள் எடுத்து இந்தியாவை பந்தாடினர். அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக இத்தொடரின் 3வது போட்டியில் தமிழக வீரர் சுந்தர் லார்ட்ஸ் மைதானத்தில் 4 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை 193க்கு சுருட்ட முக்கிய பங்காற்றினார். ஆனால் அப்படி நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை இப்போட்டியில் 68 ஓவர்கள் வரை கேப்டன் கில் பவுலிங் செய்ய அழைக்காதது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் அது பற்றி நேரலையில் கில்லை கடுமையாக விமர்சித்தார்.
ஒரு வழியாக 68வது ஓவருக்குப்பின் பவுலிங் செய்த சுந்தர் உடனடியாக ஓலி போப், ஹாரி ப்ரூக் ஆகியோருடைய விக்கெட்டுகளை எடுத்து தனது திறமையை துச்சமாக நினைத்த கேப்டன் கில்லுக்கு பதிலடி கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்படிப்பட்ட மோசமான முடிவை கில் மட்டுமே எடுத்திருப்பார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு.
“இந்த முடிவுகளை கில் மட்டுமே எடுத்திருப்பார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா? அவருடைய கேப்டன்ஷிப் கேரியரின் இந்த ஆரம்பக்கட்ட நாட்களில் அவர் யாரிடமாவது ஆலோசனைகளைக் கேட்பார் அல்லது பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரே முடிவுகளை எடுக்கட்டும் என்று மற்றவர்கள் சுதந்திரமாக செயல்பட விட்டிருப்பார்கள்”
இதையும் படிங்க: 87/4 டூ 215/4.. 37 பந்தில் 100.. வெ.இ அணியை சூறையாடிய டிம் டேவிட் சரவெடி சாதனை.. ஆஸி ஹாட்ரிக் வெற்றி
“ஆனால் இது போன்ற மோசமான முடிவை யாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் கருதவில்லை. குறிப்பாக சுந்தரை 60 ஓவர்கள் வரை பவுலிங் செய்ய வைக்கக்கூடாது என்று பும்ரா, ராகுல் அல்லது பயிற்சியாளர் கம்பீர் நினைத்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார். மொத்தத்தில் இந்தப் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியில் சிக்கி வருவதாக ரசிகர்கள் கவலையில் இருந்துள்ளனர்.