
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியா மிகவும் போராடி ஆஸ்திரேலியாவை 445க்கு ஆல் அவுட் செய்தது.
அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்தார்கள். பின்னர் களம் இறங்கிய இந்தியாவுக்கு மழை மிகப்பெரிய சோதனை கொடுத்தது. அதற்கு மத்தியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 51-4 என திண்டாடி வருகிறது.
ஜெய்ஸ்வால் 4, கோலி 3, கில் 1, ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட்டானார்கள். களத்தில் ராகுல் 33*, கேப்டன் ரோஹித் 0* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் ஆஸ்திரேலியாவை விட இன்னும் 394 ரன்கள் பின்னிலையில் இருப்பதால் மழை மட்டுமே இப்போட்டியில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லலாம்.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் யார்? அவர்கள் எதற்கு அணியில் இருக்கிறார்கள்? என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் உள்ள டெக்னிக்கல் தவறுகள் நீண்ட காலமாகியும் திருத்தப்படவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். எடுத்துகாட்டாக விராட் கோலி கடந்த பல வருடங்களாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தனது விக்கெட்டை பரிசளித்து வருகிறார்.
அதை அறிந்து அனைத்து எதிரணிகளும் அதே பந்தை வீசி அவரை காலி செய்து வருகின்றன. ஆனாலும் அந்தப் பந்துகளை சமாளிக்கும் அளவுக்கு அவருடைய பேட்டிங் டெக்னிக் இதுவரை முன்னேற்றம் அடையவில்லை. அந்தளவுக்கு சுமாராக செயல்படும் இந்திய பயிற்சியாளர்களை கேள்வி எழுப்பும் நேரம் வந்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: தம்பி இது பிராக்டீஸ் இல்ல.. 5 நிமிடம் 2 பந்தில் ஸ்டார்க் வலையில் விழுந்த ஜெய்ஸ்வால் கலாய்த்த மைக்கேல் வாகன்
“இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரின் பங்கை ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சில இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருக்கும் முக்கிய டெக்னிக் சிக்கல்கள் ஏன் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளன?” என்று கூறியுள்ளார். முன்னதாக கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில் ரியான் டஸ்சேட், அபிஷேக் நாயர் ஆகியோர் துணை பயிற்சியாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங் பயிற்சியாளர் என்று யாரும் இந்திய அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.