இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய அவர் மிடில் ஆர்டரில் மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டார். அதனால் அவருக்கு 2011 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் அவரது திறமையை அறிந்த எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் துவக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்து சொல்லி அடித்த ரோகித் சர்மா இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி நாளடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்தார். மேலும் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்களை வெளுத்து வாங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ரசிகர்கள் சோகம்:
அந்த வாய்ப்பில் 2021 லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த ரோஹித் சர்மா இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். கூடவே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் இந்தியாவுக்காக கேப்டனாக செயல்படும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்தது.
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமான ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொண்ட முதல் கேப்டனாக மோசமான சாதனை படைத்தார். அதனால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக தெரிகிறது.
ஃபீல் பண்ணாதீங்க:
அதற்கு முன்பாக ரோஹித் தாமாக ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா காலம் கடந்து சுமாராக விளையாடியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதனால் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்காக யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை என்ற வகையில் அவர் ஆதாரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஐபிஎல் 2025 தொடரை இங்கிலாந்தில் நடத்துங்க.. வாகன் ஆலோசனை
“கடந்த 15 இன்னிங்ஸில் ரோஹித் 164 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அந்த 15 இன்னிங்ஸில் 10 இன்னிங்ஸ் சொந்த மண்ணில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது. அவருடைய சமீபத்திய பேட்டிங் சராசரி வெறும் 10.9. ரோஹித் சர்மாவின் தற்போதைய ஃபிட்னஸ் லெவலை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக அவருடைய காலங்கள் முடிந்து விட்டன” எனக் கூறியுள்ளார்.