
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஏனெனில் பேக்-அப் கீப்பராக தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தொடர்ச்சியாக அசத்தியதில்லை.
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னராக இருக்கும் அவர் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டவர். அது போக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் குறைவாகவே உள்ளார்கள். எனவே ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் ட்ராபியில் கீப்பராக விளையாடுவது முக்கியம் என்று சுரேஷ் ரெய்னா, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் ரிஷப் பண்ட்டை விட அக்சர் படேல் நன்றாக பேட்டிங் செய்வதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே ராகுல் விக்கெட் கீப்பராக தொடரலாம் என்று தெரிவிக்கும் அவர் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுக்கும் வரை பெஞ்சில் இருக்கலாம் எனக் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் ட்ராபியை மட்டும் கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்டை விளையாட வேண்டும் இத்தொடருக்கு முன்பாக சிலர் என்னிடம் பரிந்துரை செய்தனர்”
“அது போக இந்தியா தங்களுடைய டாப் 6 – 7 பேட்ஸ்மேன்களில் இடது கை வீரர்களை கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் அக்சர் பட்டேல் சிறந்த ஆப்ஷன். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிகவும் பொறுமையுடன் விளையாடியதை நாம் பார்த்துள்ளோம். முதல் ஒருநாள் போட்டியிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் நன்றாக தெரிந்தார்”
“மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக போட்டியிடும் பேட்ஸ்மேன்கள் இல்லாத பிரச்சனையை இந்தியா கொண்டிருந்தது. சாம்பியன்ஸ் டிராபி ஆசியக் கண்டத்தில் நடைபெறுவதால் ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்சர் பட்டேல் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த ஆப்ஷன்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவுக்கு அடுத்து புதிய கேப்டன் சுப்மன் கில் இல்லை.. நிர்வாகம் எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ
“அதனால் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பதற்கான நேரம் தாமதமாகலாம். தற்போது அவர்கள் கண்டறிந்திருக்கும் இடது கை பேட்ஸ்மேனை மிடில் ஆர்டரில் தொடர்ந்து விளையாடலாம்” எனக் கூறினார். முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 52 (47) ரன்களை 5வது இடத்தில் களமிறங்கி அக்சர் படேல் அடித்தது குறிப்பிடத்தக்கது.