- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித், கோலிக்கு நியாயம்.. பும்ராவுக்கு அநியாயமா? கில் திணறுவாரு.. மூளையற்ற முடிவை சாடிய மஞ்ரேக்கர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் வெளிநாட்டு மண்ணில் அவர் எப்போதும் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை.

மறுபுறம் ரோஹித் இல்லாத போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக 8 விக்கெட்டுகளை எடுத்து 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுக் கொடுத்தார். எனவே ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் சொன்னதால் அவரை கேப்டனாக நியமிக்கவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மூளையற்ற முடிவு:

அதனாலேயே கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா முழுமையாக விளையாடாத போதும் கேப்டனாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதே போல பும்ராவை கேப்டனாக நியமிக்காத தேர்வுக்குழு மூளையற்ற முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே வெளிநாட்டில் திணறும் சுப்மன் கில் தற்போது கேப்டன்ஷிப் அழுத்தத்தால் இன்னும் அதிகம் தடுமாறப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் தேர்வு வேடிக்கையான ஒன்றாக அமைந்துள்ளது. என்னால் பும்ரா ஏன் கேப்டனாக கருதப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை”

- Advertisement -

மஞ்ரேக்கர் சாடல்:

“முழுமையாக விளையாட மாட்டார் என்பதால் அவரை கேப்டனாக கருதவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கடந்தக் காலங்களில் விராட் கோலி முழுமையாக விளையாடாத டெஸ்ட் தொடர்கள் இருந்தன. அதையும் தாண்டி இருந்தும் அவர்கள் கேப்டனாக செயல்பட்டனர். அப்படிப்பட்ட நிலையில் உங்களுடைய கிரேட் பவுலரான பும்ரா முதல் 2 போட்டிகளில் விளையாடினால் கூட அவரை நீங்கள் கேப்டனாக விளையாட வைக்க வேண்டும்”

இதையும் படிங்க: அப்படிப் பாத்தா ஸ்ரேயாஸை கேப்டனாக போட்டு.. 7 ரன்ரேட் இங்கிலாந்தை பயமுறுத்தலாமே? சேவாக் கேள்வி

“ஆனால் அதை செய்யாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் சுப்மன் கில் இன்னும் தம்முடைய கால் தடத்தை பதிக்கும் வழியை தேடிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு கேப்டன்ஷிப் அதிகப்படியான பாரமாகும். ஜஸ்ப்ரித் பும்ரா உங்களுடைய கேப்டனாக இல்லாதது மூளையற்ற முடிவாகும். பும்ரா சில போட்டிகளில் ஓய்வெடுத்தால் துணை கேப்டன் அணியை தலைமைத் தாங்கலாம். அது துணைக் கேப்டன் மெதுவாக வளரவும் உதவும்” என்று கூறினார்.

- Advertisement -