
ஐசிசி 2024 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்த இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாராக விளையாடி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 741 ரன்கள் அடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதன் காரணமாக இந்த உலகக் கோப்பையில் அவரை துவக்க வீரராக இந்திய அணி நிர்வாகம் களமிறக்கியுள்ளது.
யார் தான் அடிச்சா:
அந்த வாய்ப்பில் இதுவரை 1, 4, 0 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான அவர் மோசமான சாதனையும் படைத்துள்ளார். எனவே மீண்டும் விராட் கோலி 3வது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் பேட்டிங்க்கு சவாலான நியூயார்க் பிட்ச்சில் விராட் கோலி மட்டுமின்றி மற்ற பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். எனவே லீக் சுற்றல் தவறிய விராட் கோலியின் ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்காக வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி ரன்கள் அடிக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அந்த பிட்ச்சில் மற்ற பேட்ஸ்மேன்களும் நிறைய ரன்கள் அடிக்கவில்லை. அந்த பிட்ச் மிகவும் சவாலான தந்திரமாக இருந்தது. எனவே பெரிய ஸ்கோர் அருகிலேயே இருக்கிறது என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: மறுபடியும் நடந்தா நல்லாருக்கும்.. இந்த 2 காரணத்தால் இந்தியாவை சூப்பர் 8இல் ஆஸி தோற்கடிக்கும்.. ப்ராட் ஹோக்
“உலகக்கோப்பை தொடர்களில் விராட் கோலி எப்போதுமே சிறப்பாக விளையாடிய வீரர். எனவே இந்த தொடர் மற்றொரு பகுதிக்கு வரும் போது அந்த இனிப்பான ரன்கள் வருவதற்கு துவங்கும். விராட் கோலியும் இந்திய அணிக்காக தன்னுடைய செயல்பாடுகளை போடத் துவங்குவார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை இந்தியா எதிர்கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது