
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று முள்ளான்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்திய இந்திய அணியானது 162 ரன்களுக்கு சுருண்டதால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியின் போது இந்திய அணி 214 ரன்கள் என்கிற மிகப்பெரிய இலக்கினை துரத்துகையில் சுப்மன் கில் போட்டியின் ஐந்தாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் காரணமாக அடுத்து சூரியகுமார் யாதவ் அல்லது திலக் வர்மா ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்றாவது வீரராக அக்சர் பட்டேல் களமிறக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் மிகப்பெரிய இலக்கினை துரத்தும் போது மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே களத்திற்கு வரவேண்டும். ஆனால் முதல் விக்கெட் விரைவாக விழுந்ததும் அக்சர் பட்டேல் களத்திற்கு வந்து 21 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் ஐந்தாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா 34 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இப்படி திறமை வாய்ந்த திலக் வர்மாவிற்கு பேட்டிங் ஆர்டரில் ப்ரொமோஷன் அளிக்காமல் அக்சர் பட்டேலை ஏன் மூன்றாவது இடத்தில் களமிறக்கினார்கள்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் கூறுகையில் :
இந்திய அணியின் பார்வையில் டாப் 3 வீரர்கள் ரன் குவிக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக இது போன்ற மிகப் பெரிய இலக்கரை துரத்தும் போது டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும். ஆனால் புதுப்பந்திற்கு பயந்து அக்சர் பட்டேல் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார் என்று நினைக்கிறன்.
இதையும் படிங்க : கண்டிப்பா அவங்க மீண்டும் இதை செய்து பார்முக்கு வருவாங்க.. கேப்டன் மற்றும் து.கேப்டனுக்கு – அசிஸ்டன்ட் கோச் ஆதரவு
ஆனால் அவர் களமிறங்கிய இடம் சரியானது கிடையாது. ஏனெனில் அவர் ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். அதனால் விக்கெட் விழும் போது அதனை தடுக்க அவ்வப்போது அவரை பயன்படுத்துவது நியாயம்தான் என்றாலும் மூன்றாவது இடத்தில் அவரை களம் இறக்குவதெல்லாம் மிகப்பெரிய தவறு. அதன் காரணமாகவே இந்திய அணி இந்த சரிவை சந்தித்ததாகவும் சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.