ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 46வது போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களில் உள்ள டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 2 அணிகளும் தயாராக உள்ளன.
அந்த 2 அணிகளுக்கும் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பெரிய ரன்கள் குவித்து வருவது பலமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வருடம் இவ்விரு அணிகளும் பெங்களூரு மைதானத்தில் மோதின. அப்போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 164 ரன்கள் இலக்கை டெல்லி 17.5 ஓவரில் எடுத்த டெல்லி எளிதாக வெற்றி பெற்றது.
காத்திருக்கும் பதிலடி:
அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் அரை சதத்தை அடித்து 93* (53) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதும் ராகுல் “இது என்னுடைய ஊர்” என்ற வகையில் வித்தியாசமாக கொண்டாடியது வைரலானது. அத்துடன் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமக்கு ஆர்சிபி அணி உள்ளிட்ட மற்றவர்களை காட்டிலும் சின்னசாமி மைதானத்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று ராகுல் பேசியிருந்தார்.
இந்நிலையில் அன்றைய நாளில் கேஎல் ராகுல் கொண்டாடியதற்கு இன்று விராட் கோலி டெல்லியில் பதில் கொடுக்கப் போகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெங்களூரு மைதானத்தில் ராகுல் பெயரில் எந்த ஸ்டேண்ட்டும் கிடையாது. ஆனால் டெல்லியில் விராட் கோலி பெயரில் பெவிலியன் இருக்கிறது.
பங்கர் கணிப்பு:
அந்த பெவிலியனில் இருக்கும் உடைமாற்றும் அறையில் தான் டெல்லி அணியினர் இருப்பார்கள். அந்த பெவிலியனில் தான் ராகுல் அமர்ந்திருப்பார். எனவே டெல்லியில் நான் தான் பாஸ் என்று விராட் கோலி பதிலடி கொடுக்கப் போவதாக சஞ்சய் பங்கார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: சஞ்சீவ் கோயங்கா நல்ல மனுஷன்.. அவர் எங்களை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டார் – நிக்கோலஸ் பூரான் சப்போர்ட்
“இன்று விராட் கோலி கொஞ்சம் வித்தியாசமாக செய்வார் என்று நினைக்கிறேன். அனேகமாக அவர் “சரி. நீங்கள் எந்த பெவிலியனில் அமர்ந்திருக்கிறீர்கள்? அது என்னுடையது. அப்படியானால் யார் இங்கே பாஸ்? அங்கே விராட் கோலி தான் பாஸ்” என்ற வகையில் காண்பிப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். சாதாரணமாகவே விராட் கோலி வெறித்தனமாக கொண்டாடி பதிலடி கொடுக்கக் கூடியவர். எனவே பங்கர் கூறுவது போல ராகுலுக்கு இன்று கோலி பதிலடி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.



