ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடும் லக்னோ 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் இந்த தடுமாற்றமான ஆட்டத்திற்கு கேப்டன் ரிஷப் பண்ட் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் 27 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு வாங்கப்பட்ட அவர் 11 போட்டிகளில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக பேட்டிங் செய்தது லக்னோ அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் உள்ள 90 டிகிரி இடங்களுக்குள் ரிவர்ஸ் ஸ்வீப், ரேம்ப் ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
தடுமாறும் ரிஷப் பண்ட்:
அந்த ஆசையில் நேராக மற்றும் மிட் விக்கெட், மிட் ஆஃப் திசைகளில் விளையாடி பெரிய ரன்கள் குவிக்கக்கூடிய ஆட்டத்தை அவர் மறந்ததே இந்தத் தடுமாற்றத்திற்கு காரணம் என்றும் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் தம்முடைய ஒருநாள் மற்றும் டி20 ஆட்டம் பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் அவர் பிட்ச்சுக்கு பின்னே விளையாடி அவுட்டானதை கவனித்தேன். ரிஷப் பண்ட் விளையாடிய சிறந்த போட்டியை எடுத்துப் பாருங்கள. அதில் அவர் எங்கே ரன்கள் அடித்திருப்பார்? என்பதையும் பாருங்கள்”
நேராக அடிங்க:
“அந்தப் போட்டிகளில் எல்லாம் அவர் கவர்ஸ் திசையில் அல்லது பிட்ச்சில் இறங்கி சென்று நேராக அல்லது மிட் விக்கெட் அல்லது ஸ்கொயர் திசைகளில் அடித்திருப்பார். ஆனால் இப்போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அதிகம் முயற்சிக்கிறார். அந்த வகையில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை மறந்துள்ள பண்ட் குழப்பத்தில் சிக்கியுள்ளார் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: பாவம் 27 கோடிக்கு குழம்பிட்டாரு.. ரிஷப் பண்ட் 2024 டி20 உ.கோ அசத்தல் இடத்தில் விளையாடுனும்.. உத்தப்பா அறிவுரை
“அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை விளையாடும் போது நேராக ரன்கள் அடிக்கப் பார்ப்பார். அப்படி நீங்கள் நேராக ரன்கள் அடிக்க பார்க்கும் போது மற்ற இடங்களில் ரன்களை குவிக்கும் வாய்ப்பு தாமாக திறக்கும். அதை விட்டுவிட்டு விக்கெட் கீப்பருக்கு பின்னே ரன்கள் அடிக்க முயற்சி செய்யும் உங்களால் நேராக இருக்கும் இடங்களில் சிறப்பாக விளையாட முடியாது” என்று கூறினார்.