தங்க மன ப்ரீத்தி மேடம்.. 2017இல் கெய்ல், ஏபிடி, கோலியை சாய்த்த எனக்கு அவரோட விருதை கொடுத்தாங்க.. சந்தீப்

Sandeep Sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையில் வென்றது. மறுபுறம் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. 2008 முதல் விளையாடி வரும் அந்த அணி பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. 2014, 2025 சீசன்களில் ஃபைனல் வரை சென்றதே பஞ்சாப்பின் அதிகபட்ச வெற்றியாகும்.

அப்படி 18 வருடங்களாக தோல்வியை சந்தித்தாலும் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவின் முகத்தில் பெரும்பாலும் சோகத்தைப் பார்க்க முடியாது. பிரபல பாலிவுட் நடிகையான அவர் வெள்ளித்திரையில் தோன்றி ஏற்கனவே பல ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது கிரிக்கெட்டில் தோல்வியையும் தாண்டி தம்முடைய அணிக்கும் வீரர்களுக்கும் புன்னகையான முகத்துடன் ஆதரவளிக்கும் அவர் நிறைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

- Advertisement -

தங்கமான உரிமையாளர்:

இந்நிலையில் 2017 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப்புக்காக விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோருடைய விக்கெட்டுகளை எடுத்ததாக சந்தீப் சர்மா கூறியுள்ளார். வெறும் 138 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய அந்தப் போட்டியில் அக்சர் படேல் 38 ரன்கள் அடித்து 2 விக்கெட்டுகள் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்க முடிவெடுக்கப்பட்டதாக சந்தீப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போது அக்சர் பட்டேலை விட வெற்றியில் அதிக பங்காற்றியதாக கருதிய ப்ரீத்தி ஜிந்தா ஆட்டநாயகன் விருதை தமக்கு கொடுத்ததாக சந்தீப் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த வகையில் தங்கமான மனம் கொண்ட பஞ்சாப் அணியின் உரிமையாளர் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடினோம்”

- Advertisement -

சந்தீப் நெகிழ்ச்சி:

“அந்தப் போட்டியில் புதிய பந்தில் நான் விராட், ஏபிடி, கெய்ல் ஆகியோரின் 3 விக்கெட்டுகளை எடுத்தேன். இருப்பினும் அப்போட்டியில் அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட இருந்தார். மிகவும் குறைந்த ரன்களை கட்டுப்படுத்திய அந்தப் போட்டியில் அக்சர் படேல் 2 சிக்ஸர்கள் அடித்து கடைசி 38 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த வகையில் நீங்கள் அவரை ஆட்டநாயகனாக பார்க்கலாம்”

இதையும் படிங்க: தாய்நாட்டுக்காக ஓய்வை வாபஸ் பெற்ற ராஸ் டெய்லர்.. புதிய நாட்டுக்காக படைக்கப்போகும் தனித்துவ சாதனை

“அப்போது ப்ரீத்தி மேடம் ரவி சாஸ்திரியிடம் ஆட்டநாயகனாக 3 பெரிய விக்கெட்டுகள் எடுத்த சாண்டி (சந்தீப்) தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி அவர்கள் எனக்கு ஆட்டநாயகன் விருதை கொடுத்தது இனிப்பான ஒன்றாகும். பின்னர் நான் அதை அக்சரிடம் கொடுத்தேன். அதற்கு நீங்கள் அந்த 3 பெரிய விக்கெட்டுகளை எடுக்காமல் போயிருந்தால் 138 ரன்களை கட்டுப்படுத்தியிருக்க முடியாது என்று சொன்ன அக்சர் பட்டேல் வாங்க மறுத்து விட்டார்” எனக் கூறினார்.

Advertisement