ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல இந்த வருடமும் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்து வருகிறது. குறிப்பாக ஹைதராபாத் அணி சமயம் கிடைக்கும் போதெல்லாம் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.
நேற்று வெறும் 111 ரன்களை வைத்து கொல்கத்தா அணியை சாதித்து பஞ்சாப் அற்புதமான வெற்றி பெற்றது. அதே போல வெற்றிகரமான மும்பை மற்றும் சென்னை அணிகள் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்கள் நினைத்துப் பார்க்காத திருப்பங்களுடன் நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது என்றே சொல்லலாம்.
ஐபிஎல் – பிஎஸ்எல் கேள்வி:
மறுபுறம் பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஐபிஎல் தொடருடன் போட்டியிட முடியாது என்பதால் பிஎஸ்எல் தொடரை பாகிஸ்தான் வாரியம் பிப்ரவரி – மார்ச் மாதங்களிலேயே நடத்தி முடிப்பது வழக்கமாகும். ஆனால் இம்முறை 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை நடைபெற்றதால் வேறு வழியின்றி ஐபிஎல் நடைபெறும் சமயத்தில் பிஎஸ்எல் தொடரை பாகிஸ்தான் வாரியம் நடத்தி வருகிறது.
இருப்பினும் அந்தத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியும் விறுவிறுப்பாக அல்லாமல் ஒருதலைப் பட்சமாகவே முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில் உலகிலேயே ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் ஆகிய டி20 தொடர்களில் எது சிறந்தது என்று இங்கிலாந்து வீரர் ஷாம் பில்லிங்ஸ் இடம் ஒரு பாகிஸ்தான் செய்தியாளர் கேட்டார். அதைக் கேட்டு சிரித்த பில்லிங்ஸ் கேவலமாக ஏதாவது சொல்லி விடப்போகிறேன் என்ற வகையில் பதிலளித்தார்.
பில்லிங்ஸ் சாடல்:
அதாவது ஐபிஎல் தொடரை பிஎஸ்எல் கொஞ்சம் கூட நெருங்க முடியாது என்பது தெரிந்தும் இப்படி கேட்கலாமா? என்ற வகையில் அவர் பதிலளித்தார். இது பற்றி பில்லிங்ஸ் பேசியது பின்வருமாறு. “நான் ஏதாவது சில்லியாக சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? ஐபிஎல் உலகின் மிகச்சிறந்த தொடர் என்பதை புறக்கணிப்பது மிகவும் கடினம்”
இதையும் படிங்க: 90% வெற்றிக்கு காரணமான தோனிக்கு எதிராக.. சிஎஸ்கே இதை செய்யாதுன்னு பெட் கட்டாதீங்க.. இயன் பிஷப்
“இது மிக மிக தெளிவான விஷயம். மற்ற தொடர்கள் அனைத்தும் அதற்கு பின்பாகத்தான் இருக்கிறது. இங்கிலாந்தில் நாங்கள் பிஎஸ்எல் போல ஹண்ட்ரட் தொடரை ஐபிஎல்க்கு பின் 2வது சிறந்த தொடராக உருவாக்க முயற்சிக்கிறோம். ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் தொடரையும் அதே போல உருவாக்க முயற்சிக்கிறார்கள்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை, கொல்கத்தா போன்ற அணிகளுக்காக விளையாடிய பில்லிங்ஸ் தற்போது அத்தொடரில் இடம் கிடைக்காததால் பாகிஸ்தானில் லாகூர் அணிக்காக விளையாடுகிறார்.