ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் விழுந்தது. ருதுராஜ் காயத்தால் விலகியதால் தோனி தலைமையில் விளையாடிய கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் சென்னை போராடாமலேயே படுதோல்வியை சந்தித்தது.
அதனால் சென்னை அணி இங்கிருந்து பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று எதிரணி ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அதே போல காலம் கடந்த தோனி 43 வயதில் விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என்றும் எதிரணி ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இருப்பினும் லக்னோவுக்கு எதிரானப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை தொடர்ச்சியான 5 தோல்விகளை சந்தித்து நிம்மதி பெற்றுள்ளது.
90% தோனி தான்:
அந்த வெற்றிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜடேஜா 2, பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். பேட்டிங்கில் ரச்சின் 37, சாய்க் ரசீத் 27, சிவம் துபே 43* ரன்கள் அடித்துப் பங்காற்றினார்கள். அவர்கள் அனைவரையும் விட 1 கேட்ச், 1 ஸ்டம்பிங், 1 ரன் அவுட் செய்த தோனி 26* ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்து கேப்டனாக வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராகவும் தோனி சாதனை படைத்தார். இந்நிலையில் லக்னோவுக்கு எதிரான சென்னையின் வெற்றியில் தோனி தான் 90% பங்காற்றியதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார். மேலும் தோனியிடம் மந்திரக்கோல் இல்லையென பிளம்மிங் சொன்னாலும் களத்தில் மாயஜாலம் செய்யும் திறமை அவர்களிடம் இருப்பதாக பிஷப் பாராட்டியுள்ளார்.
பந்தையம் கட்ட மாட்டேன்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை ரசிகர்கள் நம்பிக்கையை காட்டுமாறு மைக் ஹசி கேட்டுக்கொண்டார். லக்னோவுக்கு எதிராக 90% வெற்றியை தோனி தான் பெற்றுக் கொடுத்தார் என்று நினைக்கிறேன். ஆட்டுத் தொழுவத்தில் வழி தவறியவர்களை தோனி மீட்டுக் கொண்டு வந்து வென்றுள்ளார்”
இதையும் படிங்க: ரோஹித், தோனிக்கு அடுத்து 3 ஆவது சிறந்த கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
“தோனி தலைமை தாங்கும் எந்த அணியையும் முடிந்ததாக நான் எழுத மாட்டேன். என்ன தான் தோனியிடம் மந்திரக்கோல் இல்லை என்று பிளம்மிங் சொன்னாலும் களத்தில் தோனி மாயாஜாலம் நிகழ்த்தக் கூடியவர். இங்கிருந்து சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பது உட்பட தோனி தலைமைத் தாங்கும் எந்த அணிக்கு எதிராகவும் நான் பந்தையும் கட்ட மாட்டேன்” எனக் கூறினார்.