IPL 2023 : விராட் கோலிய பாத்து என்ன பேசுறீங்க, உங்க கருத்தை தூக்கி குப்பைல போடுங்க – முன்னாள் வீரருக்கு சல்மான் பட் பதிலடி

Butt-1
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து தடுமாறி வருகிறது. முன்னதாக 2008 முதல் அந்த அணிக்காக சாதாரண வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி அதிக ரன்களை குவித்து முழுமூச்சுடன் போராடி வரும் விராட் கோலி கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து சுதந்திர பறவையாக விளையாடினார். இருப்பினும் தடுமாறிய அவர் தற்போது 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Kohli

- Advertisement -

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 82* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த அவர் லக்னோவுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 61 (44) ரன்களை 138.64 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அசத்தலாகவே செயல்பட்டார். இருப்பினும் வழக்கம் போல பெங்களூரு பவுலர்கள் அந்த ரன்களை பந்து வீச்சில் வாரி வழங்கி கடைசி ஓவரின் கடைசி பந்து வரை சொதப்பி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தனர்.

குப்பை கருத்து:
ஆனால் அந்த போட்டியில் அதிரடியாக செயல்பட்டு விரைவாக 40 ரன்களை எடுத்த விராட் கோலி அரை சதமடிக்க வேண்டும் எண்ணத்துடன் 50 தொடுவதற்கு 10 பந்துகளை எடுத்துக் கொண்டதாக நேரலையில் முன்னாள் நியூஸிலாந்து வீரர் சைமன் டௌல் விமர்சித்தார். அதாவது அணியின் நலனுக்காக விளையாடாமல் அந்த குறிப்பிட்ட சமயத்தில் சொந்த சாதனைக்காக விராட் கோலி விளையாடியது இறுதியில் பெங்களூருவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் சதத்துக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமையும் விமர்சித்த அவர் தற்போது விராட் கோலியையும் விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் எப்போதுமே ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்தி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடுவதே விராட் கோலி ஸ்டைலாகும். அதை பின்பற்றி இந்தியாவுக்காக 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் எப்போதுமே சாதனைகளுக்காக விளையாடாதவர் என்று ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

- Advertisement -

சொல்லப்போனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முடிவில் நான் எப்போதும் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதில்லை மாறாக சதமடித்து என்னுடைய அணியை வெற்றி பெற வைக்க விளையாடுகிறேன் என்று விராட் கோலியே வெளிப்படையாக பேசியிருந்தார். இந்நிலையில் பாபர் அசாமை விமர்சித்தது போலவே தற்போது விராட் கோலியையும் விமர்சித்துள்ள சைமன் டௌல் கருத்து குப்பையை போல் இருப்பதாக முன்னாள் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார்.

Butt

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் இருந்த போதும் அவர் பாபர் அசாமை இவ்வாறு தான் விமர்சித்தார். ஒருவேளை அந்த போட்டியை அவர் நினைவுடன் பார்த்திருந்தால் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 3 பவுண்டரிகளை விராட் கோலி அடிக்க முயற்சித்து தவற விட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே இதெல்லாம் போட்டியின் ஒரு பகுதிகளாகும். சர்வதேச அளவில் 75 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி யாருக்கும் எதைப் பற்றியும் தம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை”

- Advertisement -

“இது ஒரு மோசமான குப்பை போன்ற கருத்தாகும். மேலும் டௌல் ஒரு பவுலராகத் தான் கிரிக்கெட்டில் விளையாடினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக இளம் வீரர்கள் தான் தங்களது அணியில் இடத்தை பிடிப்பதற்காக சாதனைகளுக்காக விளையாடுவார்கள். ஆனால் விராட் கோலி ஏன் அதை செய்ய வேண்டும்? ஏனெனில் தற்போது அவர் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை பிடிப்பதற்காக விளையாடவில்லை”

இதையும் படிங்க:வீடியோ : தோனியின் 200வது போட்டியில் பந்து வீச்சில் புதிய மைல்கல் தொட்ட ஜடேஜா – ராஜஸ்தானின் அதிரடி ஸ்கோர் இதோ

“எனவே உலகத்தரம் வாய்ந்த வீரரான அவருக்கு எதிராக இது போல் சிறிய மனதுடன் சிந்திப்பதை நிறுத்துங்கள். விராட், பாபர், வில்லியம்சன் போன்றவர்கள் பவர் ஹிட்டர்கள் கிடையாது. அவர்கள் தங்களுடைய விக்கெட்டில் மதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை விளம்பரத்திற்காக டௌல் இப்படி முயற்சிக்கலாம்” என்று கூறினார்.

Advertisement