
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை கோட்டை விட்டது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் விராட் கோலி, கே.எல் ராகுல் உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதே போல கடைசி நேரத்தில் சிவம் துபே ஃபினிஷிங் செய்யத் தவறிய நிலையில் அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி வெற்றியை தாரை வார்த்தார். முன்னதாக அந்தப் போட்டியில் பந்து வீச்சில் ஒரு ஓவர் வீசிய துணை கேப்டன் சுப்மன் கில் 14 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
கில்லுக்கு போட்டி:
அதே போல ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடிய அதே பிட்ச்சில் அதே பவுலர்களுக்கு எதிராக அவர் 16 (35) ரன்களை 45.71 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அவுட்டானதும் தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியில் தனது இடம் நிரந்தரமாகி விட்டது என்று சுப்மன் கில் நினைப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்படியே விளையாடினால் போட்டிக்கு ஜெய்ஸ்வால் தயாராக இருப்பதாகவும் அவர் கில்லை எச்சரித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த ஒன்றரை வருடங்களாக சுப்மன் கில் நிறைய செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த காலகட்டங்களில் அவர் உலகின் டாப் பேட்ஸ்மேனாக தொடர்ந்து அசத்தினார். ஆனால் 2023 உலகக் கோப்பை முதல் நல்ல துவக்கத்தை பெறும் அவர் 20 – 25 ரன்கள் அடித்து அவுட்டாகிறார்”
“நிறைய தருணங்களில் அவர் காற்றில் அடித்து உள் வட்டத்திற்குள் கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார். குறிப்பாக பாயிண்ட் திசையிலும் மேலே அடிக்கக்கூடிய டிரைவிலும் அவர் அவுட்டாகிறார். நல்ல துவக்கத்தை பெறும் அவர் வேகமாக கவனத்தை சிதற விடுகிறார். 20 – 30 ரன்களுக்கு இடையில் அவரது பாதிக்கக்கூடிய காலம் போல் தெரிகிறது. அந்த இடைவெளியில் அவர் நிறைய அவுட்டாகியுள்ளார்”
இதையும் படிங்க: 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு தொடரும் சோகம்.. கெத்து காட்டி வரும் இந்திய அணி – இம்முறையும் விடக்கூடாது
“இருப்பினும் ஓரளவு நிரூபித்த அவரைப் போன்ற வீரர் இப்படி அவுட்டாவது நல்லதல்ல. ஏனெனில் ஜெய்ஸ்வால் இங்கே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி போட்டியை கொடுத்து வருகிறார். எனவே தனது இடம் நிரந்தரமாகி விட்டது என்று நினைத்தால் சுப்மன் கில்லுக்கு இங்கே சவால் காத்திருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஆகஸ்ட் நான்காம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடப்பட்டது.