ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி துபாயில் 4வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஓமனை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 160/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 66 (43) ரன்கள் எடுத்தார்.
ஓமன் அணிக்கு அதிகபட்சமாக ஷா ஃபைசல், ஆமிர் கலிம் தலா 3 விக்கெட் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ஓமனை சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 16.4 ஓவரில் 67 ரன்களுக்கு சுருட்டி எளிதாக வென்றது. படுதோல்வியை சந்தித்த ஓமனுக்கு அதிகபட்சமாக மிர்சா 27 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஃபஹீம் அஷ்ரப், சூபியன் முஹிம், சாய்ம் ஆயுப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இந்தியா உட்பட எல்லாரையும்:
அந்தப் போட்டியின் முடிவில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தங்களால் இந்தியா உட்பட அனைத்து ஆசிய அணிகளையும் தோற்கடிக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர் தோல்விகளால் தவிக்கும் பாகிஸ்தான் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரை கழற்றி விட்டு சல்மான் ஆகா தலைமையில் புதிய டி20 அணியை களமிறக்கியுள்ளது. அவருடைய தலைமையில் தங்களது சொந்த மண்ணில் வங்கதேசத்தை தோற்கடித்து பாகிஸ்தான் அசத்தியது.
அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் சமீபத்தில் சார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. தற்போது ஓமனையும் எளிதாக தோற்கடித்துள்ள பாகிஸ்தானிடம் அடுத்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை இருப்பதாக சல்மான் ஆகா மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பாகிஸ்தான் வீழ்த்தும்:
“பேட்டிங்கில் இன்னும் நாங்கள் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். ஆனால் பவுலிங் அற்புதமாக இருக்கிறது. எங்களுடைய பவுலிங் துறையால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சாய்ம் ஆயுப் மட்டுமின்றி எங்களிடம் இருக்கும் 3 ஸ்பின்னர்களும் வித்தியாசமானவர்கள். எங்களிடம் 4 – 5 நல்ல ஆப்ஷன்கள் இருக்கிறது. அபுதாபி, துபாயில் விளையாடும் போது உங்களுக்கு அது தேவை”
இதையும் படிங்க: 141 ரன்ஸ்.. 39 பந்தில் சதம்.. தெ.ஆ அணியை பந்தாடிய சால்ட்.. இங்கிலாந்துக்காக 2 வரலாற்று சாதனை
“அதிரடியான துவக்கத்தைப் பெற்ற நாங்கள் 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் இப்படி தான் செல்லும். மிகவும் நல்ல கிரிக்கெட்டை விளையாடும் நாங்கள் சமீபத்தில் முத்தரப்பு தொடரை வென்றோம். இங்கே கச்சிதமாக வெற்றி பெற்றுள்ளோம். அது போல எங்களுடைய திட்டங்களை நீண்ட காலம் செயல்படுத்தும் பட்சத்தில் நாங்கள் எந்த அணியையும் தோற்கடிக்க போதுமானவர்கள்” என்று கூறினார்.



