இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் 146 ரன்கள் தோற்கடித்த இங்கிலாந்து தொடரை சமன் செய்தது. செப்டம்பர் 12ஆம் தேதி மான்செப்டரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 304/2 ரன்கள் குவித்து அசத்தியது.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்த முதல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி என்ற உலக சாதனையை இங்கிலாந்து படைத்தது. அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜோஸ் பட்லர் – பில் சால்ட் ஆகியோர் ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்காவை அடித்து நொறுக்கினர். குறிப்பாக 6 ஓவரில் 100 ரன்கள் அடித்த அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தனர்.
39 பந்தில் சதம்:
அதில் 18 பந்துகளில் அரை சதத்தை அடித்த பட்லர் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 83 (30) ரன்களை விளாசி போர்ட்சுன் அவுட்டானார். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தல் 26 (14) ரன்னில் போர்ட்சுன் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சால்ட் 19 பந்துகளில் அரை சதத்தை அடித்து ஓயாமல் தென்னாப்பிரிக்கா பவுலர்களை பந்தாடினார்.
நேரம் செல்ல செல்ல பட்டாசாக விளையாடிய அவர் 39 பந்துகளில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை சால்ட் படைத்தார். இதற்கு முன் 2021ஆம் ஆண்டு நாட்டிங்கம் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்துக்காக லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.
சால்ட் வரலாற்று சாதனை:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் தம்முடைய பங்கிற்கு 41* (21) ரன்கள் குவித்தார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத சால்ட் 15 பவுண்டரி 8 சிக்ஸருடன் 141* (60) ரன்களை விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற தனது சொந்த சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி டி20 அரங்கில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – பில் சால்ட்
இதற்கு முன் 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சால்ட் 119 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 16.1 ஓவரில் 158க்கு சுருட்டி வீசிய இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் (146 ரன்கள்) பதிவு செய்து சாதனைப் படைத்தது. படுதோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேப்டன் மார்க்ரம் 41 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.



