இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதற்கு முன்னதாக ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் தற்போது டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்த பிலிப் சால்ட் :
இந்த டி20 தொடரின் முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற வேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அந்த வகையில் நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தது.
இந்த போட்டியின் போது இங்கிலாந்து சார்பாக அதிகபட்சமாக பிலிப் சால்ட் 141 ரன்களையும், ஜாஸ் பட்லர் 83 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தினர். பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்ரிக்க அணி 158 ரன்கள் மட்டுமே குவித்ததால் 146 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக சதம் விளாசிய பிலிப் சால்ட் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவின் மாபெரும் சாதனை ஒன்றிணை முறியடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்களை அடித்த வீரர்களாக மேக்ஸ்வெல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 5 சதங்களுடன் முதலாவது இடத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : 304 ரன்ஸ்.. இந்தியாவை முந்தி தெ.ஆ அணியை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 2 உலக சாதனை.. வரலாற்று வெற்றி
அவர்களுக்கு அடுத்து சூரியகுமார் யாதவுடன் தற்போது பிலிப் சால்ட் நான்கு சதங்களுடன் இரண்டாவது இடத்தினை பகிர்ந்துள்ளார். அதுமட்டும் இன்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த வீரராக சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தார். 57 இன்னிங்ஸ்களில் சூரியகுமார் யாதவ் நான்கு சதங்களை விளாசியிருந்த வேளையில் தற்போது தனது 42-வது இன்னிங்ஸ்ஸிலேயே நான்காவது சதத்தை அடித்து பிலிப் சால்ட் சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



