இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் இரண்டாவது போட்டியில் வென்றது. அதனால் சமனில் இருக்கும் அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 267 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 89, பென் டக்கெட் 52 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் 6, நோமன் அலி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் போராடி 344 ரன்கள் குவித்து. 177-7 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சௌத் ஷகீல் 134, சஜித் கான் 48*, நோமன் அலி 45 ரன்கள் எடுத்தனர்.
காயத்தையும் தாண்டி:
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ரீகன் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 77 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 24-3 என திணறி வருகிறது. தற்போதைய நிலைமையில் 53 ரன்கள் முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு 10வது இடத்தில் களமிறங்கிய சஜித் கான் 31 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். அப்போது இங்கிலாந்து வீரர் ரீகன் அகமதுக்கு எதிராக லேப் ஷாட் அடிக்க முயற்சித்த அவர் சரியாக அடிக்கவில்லை. துரதிஷ்டவசமாக அந்த பந்து அவருடைய கன்னத்தில் பட்டு பெரிய காயத்தை ஏற்படுத்தியது.
அர்ப்பணிப்பான ஆட்டம்:
அதனால் அந்த இடத்தில் ரத்தமும் வந்து அவருடைய ஜெர்சியில் சொட்ட சொட்ட விழுந்தது. உடனடியாக பாகிஸ்தான் அணி மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து அவருடைய காயத்திற்கு முதலுதவி செய்தனர். அதை எடுத்துக்கொண்ட சஜித் கான் களத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அர்பணிப்புடன் நாட்டுக்காக வெறியுடன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 48* (48) ரன்களை குவித்து அவுட்டாகாமல் அசத்தினார்.
இதையும் படிங்க: அவங்க எவ்ளோ தான் போராடுவாங்க.. இதான் இந்தியாவின் சரிவுக்கு காரணம்.. இப்போவும் ஜெயிப்போம்.. மோர்கல்
அதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் “இவ்வளவு நாளாக எங்க இருந்தீங்க” என்று பாராட்டினர். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “2 தையல்கள் போட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடும் போது இது போன்ற விஷயங்கள் பெரிய விஷயமல்ல. அணிக்கு நான் தேவைப்படுகிறேன். உள்ளூரில் நான் சில அரை சதங்கள் அடித்துள்ளேன். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் செட்டிலாக இருக்கும் எங்கள் பேட்ஸ்மேனுக்கு தொடர்ந்து எதிர்ப்புறம் இருந்து உதவ வேண்டியது என்னுடைய கடமை” என்று கூறினார்.



