பும்ராவை 6 சிக்ஸர் அடிப்பார்ன்னு உசுப்பேத்தி ஹாட்ரிக் டக் அவுட்டான பாக் வீரர்.. 2 மோசமான சாதனை

Saim Ayub
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 146/9 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பகார் ஜமான் 50, ஷாஹின் அப்ரிடி 29* ரன்கள் எடுத்த நிலையில் அமீரகத்துக்கு அதிகபட்சமாக ஜுனைட் சித்திக் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய அமீரகத்தை 17.4 ஓவரில் 105 ரன்களுக்கு சுருட்டி வீசிய பாகிஸ்தான் எளிதாக வென்றது. அதிகபட்சமாக ராகுல் சோப்ரா 35 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 2, ஹரிஷ் ரவூப் 2, அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 2வது வெற்றி பெற்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்ணிட்டாங்க:

முன்னதாக பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சாய்ம் ஆயுப் சமீப காலங்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அப்படிப்பட்ட அவர் இத்தொடரின் முதல் போட்டியில் கத்துக்குட்டி ஓமன் அணியிடம் கோல்டன் டக் அவுட்டானார். அப்போது ஆசியக் கோப்பையில் இந்தியாவின் நம்பர் ஒன் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக ஆயுப் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹ்மத் அதிரடியான கணிப்பை வெளியிட்டார்.

அதனால் நம்முடைய பரம எதிரியான இந்தியாவின் நம்பர் ஒன் பவுலரை ஆயுப் வெளுக்கப் போகிறார் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் முதல் பந்திலேயே அவரை ஹர்திக் பாண்டியா பும்ராவின் கையில் கேட்ச் கொடுக்க வைத்து கோல்டன் டக் அவுட்டாக்கினார். அந்த சூழ்நிலையில் மற்றொரு கத்துக்குட்டியான அமீரகத்திடம் ஆயுப் மீண்டும் சில்வர் டக் அவுட்டானார்.

- Advertisement -

2 மோசமான சாதனை:

மொத்தத்தில் பும்ராவை 6 சிக்ஸர்களாக அடிப்பார் என்று உசிப்பேற்றி விடப்பட்ட ஆயுப் 0 (1), 0 (1), 0 (2) என ஹாட்ரிக் டக் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் ஹாட்ரிக் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனையை ஆயுப் படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான முழு உறுப்பு நாட்டு ஓப்பனிங் வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 41 ரன்ஸ்.. அம்பயரை பந்தால் வெளியேற்றிய பாகிஸ்தான்.. அமீரகத்தை வீழ்த்தியதால் மீண்டும் இந்தியாவுடன் மோதல் எப்போது?

இதற்கு முன் 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்ட்ரே பிளட்சர் மற்றும் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் ஆகியோரும் ஹாட்ரிக் டக் அவுட்டாகியுள்ளார்கள். அந்தப் பட்டியலில் தற்போது ஆயுப் தன்னுடைய பெயரை எழுதியுள்ளார். இதனால் பும்ராவை 6 சிக்ஸர்கள் அடிப்பார் என்று உசுப்பேற்றி விடப்பட்டவர் 6 டக் அவுட்டாவார் போல் தெரிகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

Advertisement