41 ரன்ஸ்.. அம்பயரை பந்தால் வெளியேற்றிய பாகிஸ்தான்.. அமீரகத்தை வீழ்த்தியதால் மீண்டும் இந்தியாவுடன் மோதல் எப்போது?

PAK vs UAE 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 17ஆம் தேதி குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் ஒரு மணி நேரம் தாமதமாக நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் போராடி 146/9 ரன்கள் அடித்தது.

அந்த அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் பர்ஹான் 5, சாய்ம் ஆயுப் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் அனுபவ வீரர் ஃபக்கார் ஜமான் அரை சதத்தை அடித்து 50 (36) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் சல்மான் ஆஹா 18, ஷாஹின் அப்ரிடி 29 (14) ரன்கள் எடுத்து கை கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியாவுடன் மீண்டும் மோதல்:

அமீரக மணிக்கு அதிகபட்சமாக ஜுனைட் சித்திக் 4, சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய அமீரகம் அணியை சிறப்பாக பவுலிங் செய்த பாகிஸ்தான் 17.4 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ராகுல் சோப்ரா 30 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது, சாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவில் 3 போட்டிகளில் 2வது வெற்றியைப் பெற்ற சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் குரூப் ஏ பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 4 போட்டியில் மோதும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோத உள்ளன.

- Advertisement -

அம்பயருக்கு நேர்ந்த பரிதாபம்:

முன்னதாக அப்போட்டியில் 147 ரன்களை துரத்திய அமீரக அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து 37/3 என தடுமாறியது. அப்போது சாய்ம் ஆயுப் வீசிய 6வது ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட துருவ் பராசர் ரன் எதுவும் எடுக்கவில்லை. அந்தப் பந்தை பிடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஹாரிஸ் பவுலர் கையில் தூக்கிப் போட்டார்.

இதையும் படிங்க: 13க்கு 13.. உலகச் சாம்பியன் ஆஸியின் வெற்றி நடையை உடைத்த இந்தியா.. 18 வருடம் கழித்து வரலாற்று வெற்றி

சரியாக பார்க்காமல் அவர் தூக்கிப்போட்ட பந்து துரதிஷ்டவசமாக அம்பயர் ருசிச்ரா பள்ளியகுர்கே காதில் பட்டது. திடீரென பந்து பட்டதால் பெரிய வலியை சந்தித்த அவரால் தொடர்ந்து நடுவராக நிற்க முடியவில்லை. அதனால் களத்தை வெளியேறிய அவருக்கு பதிலாக ரிசர்வ் அம்பயர் கசி சோஹெல் நடுவராக செயல்பட்டார். அப்படி பாகிஸ்தான் வீரர்கள் நடுவரை காயமடைய வைத்து வெளியேற்றிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement