
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த வேளையில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 201 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதன் காரணமாக 288 ரன்கள் என்கிற மிகப்பெரிய முன்னிலையுடன் தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 314 ரன்கள் என்கிற மிகப்பெரிய முன்னிலையுடன் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வீரராக சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்த வேளையில் தனக்கு கிடைத்த அந்த பொன்னான வாய்ப்பை சாய் சுதர்சன் தவறவிட்டார் என்றே கூற வேண்டும்.
ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 40 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே அவர் மூன்றாம் இடத்தில் சிறப்பாக விளையாடுவதில்லை, அவருக்கு பதிலாக வேறு யாரையாவது சேர்க்க வேண்டும் என்ற விமர்சனம் அதிகமாக இருந்து வருகிறது.
இவ்வேளையில் தனக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பையும் சாய் சுதர்சன் தவற விட்டுள்ளார். இதன் காரணமாக இனிவரும் டெஸ்ட் தொடர்களில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ்கான் அல்லது தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவை 201க்கு சுருட்டி.. ஃபாலோ ஆன் கொடுக்காத தெ.ஆ.. வெளிநாட்டு அணியாக பெருமையான சாதனை
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற சூழல் இருக்கும் வேளையில் இந்த போட்டியில் அவர் சதமோ அல்லது இரட்டை சதமோ அடித்திருந்தால் அவர் மறுக்க முடியாத வீரராக மாறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.