உழைப்பின் பயனாக சாய் சுதர்சனுக்கு அடித்த ஜாக்பாட், இந்திய அணியில் வழங்கப்பட்ட வாய்ப்பு – எந்த தொடரில் தெரியுமா?

Sai-Sudharsan
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் போட்டிகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டிஎன்பிஎல் தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் குஜராத் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி 145 ரன்கள் குவித்து கோப்பை வெல்ல உதவிய அவர் இந்த வருடம் 8 போட்டிகளில் 362 ரன்களை விளாசி அனைவரது பாராட்டுகளைப் பெற்றார். அதிலும் குறிப்பாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் 96 ரன்கள் அடித்து நொறுக்கிய அவரை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வெளிப்படையாக பாராட்டியிருந்தார்.

அதே வேகத்தில் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் தொடரில் 6 போட்டிகளில் 371* ரன்களை 74.20 என்ற சராசரியில் வெளுத்து வாங்கி வரும் அவர் தன்னுடைய கோவை அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும் பயணத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். மேலும் தமிழகத்திற்காக 2021ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமாக இதுவரை 7 போட்டிகளில் 572 ரன்களை 47.66 என்ற சராசரியிலும் 11 லிஸ்ட் ஏ போட்டிகளில் 664 ரன்களை 60.36 என்ற சராசரியிலும் குவித்துள்ள அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

உழைப்புக்கு பரிசு:
இந்நிலையில் வரும் ஜூலை 13 முதல் இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதாவது ஆசிய கண்டத்தில் இருக்கும் வளர்ந்து வரும் அணிகளுக்காக 50 ஓவர் போட்டிகளை மையப்படுத்திய ஆசிய கோப்பையை ஆசிய கவுன்சில் நடத்த உள்ளது. அத்தொடரில் பங்கேற்கும் இந்தியா ஏ அணியில் தம்முடைய உழைப்பின் பரிசாக சாய் சுதர்சனக்கு இடம் கிடைத்துள்ளது.

அதே போல தமிழக அணிக்காக சமீபத்திய வருடங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒடிசாவை சேர்ந்த வீரர் ரஞ்சன் பிரதோஷ் பால் இத்தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளார். 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற டெல்லியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் யாஷ் துள் கேப்டனாக தலைமை தாங்கும் இந்த அணியில் அந்த 2 தமிழக வீரர்களுடன் இந்த வருடம் சென்னை அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தேர்வாகி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதே போல ராஜஸ்தான் அணியில் பினிஷராக செயல்பட்டு அசத்திய இளம் வீரர் துருவ் ஜுரேல் பஞ்சாப் அணியில் சிறப்பாக செயல்பட்ட பரப்சிம்ரன் சிங் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக சில வெற்றிகளின் முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் அணியில் வாயில் மட்டும் பேசிய ரியான் பராக் இத்தொடரில் தேர்வாகியுள்ளது பல ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்ட நேஹால் வதேரா ஸ்டேண்ட் பை வீரராக இடம் பெற்றுள்ளார். அந்த வகையில் இந்த தொடரில் ஜூலை 13ஆம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் அமீரகம் ஏ அணியை எதிர்கொள்ளும் இந்தியா ஏ அணி ஜூலை 15, 18 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் நேபால் ஏ அணிகளை எதிர்கொள்கிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் 2 அணிகள் ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ஃபைனலில் கோப்பைக்காக மோத உள்ளன.

இதையும் படிங்க:TNPL 2023 : கடைசி பந்தில் திருப்பூரை வீழ்த்தி நூலிழையில் நாக் அவுட் சென்ற மதுரை – பிளே ஆஃப் சுற்றில் மோதும் அணிகள் விவரம் இதோ

இத்தொடரில் பங்கேற்கும் இந்தியா ஏ அணி இதோ: யாஷ் துள் (கேப்டன்), சாய் சுதர்சன் அபிஷேக் ஷர்மா, நித்தின் ஜோஸ், பிரதோஷ் பால், ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங், துருவ் ஜுரேல், மனவ் சுதர், யுவ்ராஜ்சிங் டோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதீஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
ஸ்டேண்ட் பை: ஹர்ஷ் துபே, நேஹல் வதேரா, ஸ்னேல் படேல், மோஹித் ரெட்கர்

Advertisement