
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 759 ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார். இந்த தொடரின் எலுமினேட்டர் போட்டியோடு குஜராத் அணி வெளியேறியதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை அந்த அணி தவறவிட்டது. ஆனாலும் இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சாய் சுதர்சனுக்கு அனைவரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அதோடு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் அவர்களது இடங்களை நிரப்ப சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் நிச்சயம் சாய் சுதர்சன் இடம்பெற்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ரிஸ்க் எடுக்காமல் மிகச் சிறப்பாக தொடர்ச்சியாக ரன் குவிக்கும் அவரது திறன் கவனிக்கக்கூடிய இடத்தில் இருப்பதால் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் இந்த தொடரின் இரண்டாவது பயிற்சி போட்டியில் சாய் சுதர்சன் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பேட்டி ஒன்றினை அளித்துள்ள சாய் சுதர்சன் கூறுகையில் :
நான் இங்கிலாந்து மண்ணில் 7 கவுண்டி போட்டிகளில் விளையாடியுள்ளேன். அந்த போட்டிகள் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளன. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய பேட்டிங் டெக்னிக்கில் இருந்த ஒரு சில குறைபாடுகளை நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது தான் கவனித்தேன். கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியதன் மூலம் என்னுடைய பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் செய்ய உதவி கிடைத்தது.
இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் சாய் சுதர்சன் அசத்துவார்.. காரணத்தை சொல்லி பாராட்டிய – மஹேலா ஜெயவர்த்தனே
என்னுடைய பேட்டிங் ஃபார்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கவுண்டி கிரிக்கெட்டே உதவியதாகவே கருதுகிறேன். நிச்சயம் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் என்னால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.