தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ் முதல் அணியாக தகுதி பெற்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் திருப்பூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை வீழ்த்தியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் 200/3 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக துஷார் ரஹிஜா 55, அமித் சாத்விக் 55, முகமத் அலி 45* ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 201 ரன்களை துரத்திய கோவைக்கு விக்னேஷ் 0, சுஜய் 19, சுரேஷ் குமார் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 53/3 என தடுமாறிய அந்த அணிக்கு 3வது இடத்தில் களமிறங்கி வெளுத்து வாங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் சதமடித்து 123 (56) ரன்கள் குவித்தார்.
கம்பீர் கவனிப்பாரா:
அவருடன் முகிலேஷ் 48* (31) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே கோவை எளிதாக வென்றது. இந்த வெற்றிக்கு 9 பவுண்டரி 9 சிக்ஸர்களை பறக்க விட்டு 219.64 ஸ்ட்ரைக் ரேட்டில் 123 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் 2016 முதல் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரின் வரலாற்றில் அதிகபட்ச (123*) ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற மாபெரும் சாதனையும் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2022 சீசனில் நெல்லைக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் முரளி விஜய் 121 (66) ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இப்படி உள்ளூர் மற்றும் டிஎன்பிஎல் தொடரில் அசத்தி வரும் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் குஜராத்துக்காக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 2023 ஐபிஎல் ஃபைனலில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை அடித்து நொறுக்கிய அவர் 96 ரன்கள் விளாசி ஜாம்பவான் சச்சினின் பாராட்டை அள்ளினார்.
அதன் காரணமாக 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அரை சதமடித்து அசத்தினார். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக செயல்பட்டு வரும் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் அறிமுகமான அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: அந்த முடிவு தோனி, விராட், ரோஹித்திடம் கத்துக்கிட்டது தான்.. இந்திய அணியை வாழ்த்திய சூரியகுமார் பேட்டி
ஆனால் அதற்கடுத்ததாக நடைபெற்ற இலங்கை டி20 தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.



